வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

10 பிப்ரவரி, 2012




புறநானூற்றில் மாற்று அடையாளங்களும்
சாதியச் சொல்லாடல்களும் - மு.இரமேஷ்

கட்டுரையைப் படிப்பதற்கு முன்பாக:

எனது நண்பரும் மிகச்சிறந்த படிப்பாளியும் படைப்பாளியுமான பேராசிரியர் மு.இரமேஷ் எழுதிய இந்தக் கட்டுரை தமிழ்ச்சூழலில் மிகவும் முக்கியமான ஒன்று. தோழர் இரமேஷ் போன்ற ஒரு சமூகச்சிந்தனையாளரை என் வாழ் நாளில் இது வரை நான் சந்தித்ததே இல்லை. இப்படிச் சொல்வதன் காரணம் உங்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டும். அப்பொழுதுதான் இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் சமூகத்தில் நமது இடம் என்னவாக இருக்கிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்ள முடியும்.

சிறு பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். சேலம் அரசு கலைக்கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணி புரிகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கையால் அவரது பார்வை பறிக்கப்பட்டவர். இருந்தும் தொடர்ந்து வெகு உற்சாகத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறார். இலக்கியங்களைப் படைத்துக் கொண்டிருக்கிறார். அவரது இந்தக் கட்டுரையை இந்த வலைப்பூவில் அவரின் விருப்பப்படி வெளியிடுவதை நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். மேலும் அவர் எழுதி நான் தட்டச்சு செய்ததல்ல இந்தக் கட்டுரை. அவரே தட்டச்சு செய்து என் மின்னஞ்சலுக்கு அவர் கைப்பட அனுப்பியது. இதில் எந்த ஒரு எழுத்தையும் நான் திருத்தம் செய்யவில்லை. இது புத்தகமாக வெளிவரும் போது திருத்திக் கொள்வதே நலம் என்று நான் கருதியதால் இதில் வரும் சிறு சிறு பிழைகளை அப்படி இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். இது தோழர் இரமேஷ் அவர்களின் முற்போக்குச் சிந்தனையான பின் நவீனத்துவக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட எழுத்து. அவர் கைப்பட தட்டச்சு செய்த எழுத்து. அவரது தொடர்பு எண்: 9942197838.

அவரது கவிதைத் தொகுப்புகள்:

1. மழையில் கறையும் இரவின் வாசனை
2. வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம்
3. என் தேசத்து ஜதிகள்

சிறுகதைத் தொகுப்பு:

1. நிழல் சுடுகிறது

கட்டுரைத் தொகுப்புகள்:

1. காட்சியதிகாரம்
2. கவிதையியல் மறுவாசிப்பு
3. வரலாற்றுப் பன்மையும் தேசிய ஒடுக்கமும் (விரைவில் வெளிவர உள்ளது)

தனது பணிகளுக்கு இடையிலும் மிகுதியான நேரத்தை இலக்கியத்திற்கென்று அர்ப்பணித்திருக்கிறார். இனி நீங்கள் இக்கட்டுரையைப் படிக்கத் தடையேதும் இல்லை.......



      சைவசமயப் பண்பாட்டுக் களத்தையும் மொழிவழி அரசியல் களத்தையும் இணைத்து ஏக தமிழ் மைய கருத்தியலை உருவாக்கியதில் சாதிய இந்துக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இந்த ஏக தமிழ் மையக் கருத்தியலுக்கு அடிப்படையான ஒரேப்பண்பாடு ஒரே அரசியல் என்பனவற்றை பழந்தமிழ் பனுவல்களிலிருந்துப் பெற்றனர். இறையனார்கலவியல் போன்ற உரைமுயற்சிகள் முன்னதற்கும் புறநானூறு உள்ளிட்ட இலக்கியங்கள் பின்னதற்கும்  சான்றுகளாகின்றன 
      “தெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம் நிர்ணயம் முழுமையென்பனவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்கக் கருத்தியல்களுக்கும் கேள்விகளின்றி ஒப்படைப்பையும் முழுநம்பிக்கைகளையும் கொண்டு இயங்கும் பொதுக்கலமதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுன் இணைப்புகள் கேள்விமறுப்பு, ஆய்வுமறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுன் இணைப்புகளை துண்டித்து கேளவிகளை பெறுக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பனவற்றை உருவாக்கும் செல்தான் சமூகத்தை அறம் சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.” (பிரேம்ரமேஷ் கட்டுரையும், கட்டுக்கதையும் ப.2.)

இக்கருத்தின்  அடிப்படையில் புறநானூற்றில் உள்ள மாற்று அரசியல் அடையாளங்களையும், சாதிய பண்பியல் கூறுகளையும் சுட்டுவதன்மூலம் தமிழில் உள்ள பண்மை தண்மைப் புலனாகும்.  
புறநானூறு முன் வைக்கும் அடையாள அரசியலும்
நிறுவன அலகுகளும் : 
      தமிழில் உள்ள பன்மையானதும் அதே சிக்கலானதும் அடையாளங்களைப் பேச புறநானூற்றைத் தேர்ந்தெடுக்க பலகாரணங்கள் உண்டு. அவற்றுள் குறிப்பிடத் தக்க ஒன்று அதன் நேரடியான வெளிப்பாட்டுத் தண்மையே ஆகும். அடையாளரசியல் என்பதை சமூகப் பண்பாட்டு களம் என்றும் நிறுவன அலகுகள் என்பதை அரசதிகாரமையங்கள் என்றும் முதலில்புரிந்துக் கொள்வது நமக்கு முன் நிபந்தனையாகிறது.நிலக்கிழார்கள்,குறுநிலமன்னர்கள்,பெருவேந்தர்கள் என படிநிலைத் தண்மைக்கொண்டதாக அரசதிகார நிறுவனங்கள் தோற்றம் கொண்டிருந்தன. “சீறூர்மன்னர், முதுகுடிமன்னர், குறுநிலமன்னர்,  வேந்தர்” மாதைய்யன் குறிப்பிடுவதும் இதனோடு இணைத்து எண்ணத்தக்கது.  (சங்ககால இனக்குழுச்முதாயமும் அரசுருவாக்கமும்)”. இப்படி தன்மைக் கொண்ட அரசதிகார உருவாக்கம் நிலவளம், நிலயெல்லை இவற்றைஅடிப்படையாகக் கொண்டவை. எல்லையை அடிப்படையாக் கொண்டவை பேரரசுகளாகவும், வளத்தை அடிப்படையாகக் கொண்டவை குறுநில அரசுகளாகவும் தோன்றின.
 
குறுநிலமும் அதன் அலகும்,,,,,  
      குறுநிலம் என்ற தொடர் அரசதிகார வரம்பை சுட்டும் சொல்லாடலாகும். அடர்காடுகளையும், மலைகளையும் ஆண்டோர் குறுநிலமன்னர்களாவர். வறட்சியாலும், செழிப்பாலுமான இயற்க்கை வளத்தை மட்டும்அடிப்படை அலகாக கொண்டு இயங்கியவை இவை. இதனால் இம்மக்களது வாழ்க்கைமுறை இணக்குழுத் தண்மையுடையதாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் குறுநிலரசுகளை இனக்குழு அரசுகள் எனச்சொல்லுவதற்கும் வாய்ப்பு   உண்டு. இயற்க்கைவளமே இவர்களுக்கு அடிப்படையானதால் கூட்டுண்ணும் பண்பும், கொடைப் பண்பும் இவர்களிடத்தில் மிக்கிருந்தது. அகழிகளையோ, பிற காவலரண்களையோ, படைகளையோ படைக்கருவிகளையோ செயற்கையாக பெறுக்குவதற்கான வாய்ப்பினை இவர்கள் வாழ்ந்த நில அமைப்பு இவர்களுக்கு வழங்கவில்லை. பேரரசுகள் நில எல்லையை அடிப்படையகாக கொண்டு தோற்றம்பெற்றன. ஊர்களை எரியூட்டல், வளங்களை சூரையாடல், மகளிரின் கருவறுத்தல், மயிற் அருத்தல் போன்றவை எல்லை விரிவுப்படுத்துவதற்கான போர் உத்திகளாக இருந்தன. வேள்வி செய்தலும், யூபம் நாட்டலும் கூட போர் நெறியின் ஒரு பகுதியாகவேப் பேணப்பட்டது. புறம் 4,6,7,8,15, 16,23,25... ஆயுதசாலைகள், படைக்கொட்டில்கள் உள்ளிட்ட பெறும் படைகளை வைத்திருந்ததோடு துணைப்படைகளையும், கூலிப்படைகளையும் வைத்துக்கொண்டிருந்தன. சேரருக்கு நாஞ்சில்வள்ளுவன்,புறம் 140... வயமான்பிட்டனும் புறம் 170... பாண்டியருக்குநாளைக்கிழவன் நாகனும், ஈந்தூர்தோயன்மாறனும் அவ்வப்போது உதவியுள்ளனர். இவற்றைக்காட்டிலும் துணைப்படைக்கு நேரடியான சான்றாக திருக்கோயிலூரையாண்ட மலையமான் திருமுடிக்காரியைக் கொள்ளலாம். இராச சுயம் வேட்ட பெறுநர் கிள்ளிக்கு ஆதரவளித்து சேரனை வெற்றிக் கொணடதும் புறம் 123... சேரனுக்கு ஆதரவாகச் சென்று வல்வில் ஓரியைக்கொன்று கொல்லிமலையைச் சேரனுக்கு பெற்று தந்ததும். புறம் 155... சோழன் ஏனாதித் திருக்கண்ணனை அரியணையில் அமரச் செய்ததும், புறம் 178... மலையமான் திருமுடிக்காரியின் தலைமையில் இயங்கிய துணைப்படையாகும். சீறூர் தலைவர்கள் கூலிப்படையாக இயங்கியுள்ளனர். இவர்கள் நிரந்தர பணியாளர்களாக இல்லாமல் வேலை முடித்து கூலிப்பெற்றுத் திரும்பிவிடுவர். புறம் 302 308 317 323 326... இதனை தன்னடை என்கிறது புநானூறு. தன்னடை நல்கல் வேந்தர்கு கடனே என்கிறார் பொன்முடியார். நன்னடைநல்கல் வேந்தர்கு கடனே என்பது ஔவை. சு. துரைசாமி பிள்ளை பதிப்பில் உள்ள பாடபேதம் என்றும், உ.வே.சா. உரையை மேற்கோள் காட்டி தன்னடை நல்கல் வேந்தர்க்கு கடனே என்பதை நிறுவும் பெ. மாதைய்யன் கருத்து ஒப்புநோக்கத்தக்கது. தன்னடைப் பெற இயலாத காலங்களில், சீறூர் தலைவர்கள் அதாவது கூலி படைஞ்ஞர்கள் தங்களது வாளை விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தியுள்னர். புறம் 316 317... பெருவேந்தர்கள் பெரும் பெரும்படைகளை வைத்துக்கொண்டு பலநிலைப்பட்ட சிறு குறு நிலவளங்களை அழித்துள்ளனர். இவ்வாறு அழிப்படும் சூழலில்  பெருவேந்தர்களுக்கு எதிரான தங்களது அடையாளரசியலை முன்னுறுத்தியுள்ளனர்.
      அடலரும் துப்பின் ----
      ------குருந்தே  முல்லையென்று
      இந்நான்கல்லது பூவும் இல்லை 
      கருங்கால்வரகே இருங்கதிர் திணையே
      சிருக்கொடிக்கொல்லே பொரிக்கிழர் அவரையோடு
      இந்நான்கல்லது உணாவுமில்லை 
      துடியன் பானன் பறையன் கடம்பன் என்று
      இந்நான்கல்லது குடியுமில்லை
      ஒண்ணாத் தெவ்வர் முன்னின்றுவிளங்கி
      ஒளிரு ஏந்தும் மறுப்பின் களிறு எறிந்து வீழ்ந்ததென
      கல்லே பரவினல்லது
      நெல்லுகுத்துப்  பரவும் கடவுளும் இலவே. (புறம் 335., மாங்குடிக்கிழான்.)  
      பூக்கள், உணவுகள், குடிகள், நம்பிக்கையென தங்களது பெருவேந்தர்களுக்கு முன்னிலையில் சிறுக்குழுக்கள் எதிர்ப் பண்பாட்டரசியலை முன்னிருத்துகின்றனர். நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே எதிர் பண்பாட்டுஅரசியலின் உச்சமாகக்கருதலாம்.  
      அலிதோதானே பாரியதுப் பரம்பே
      நலிகொள்முரசின் மூவிரும் முற்றினும்
      உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே
      ஒன்றே சிறு இலை வெதிரின் நெல் விலையுமே
      இரண்டே  தீம்சுலைபலவின் பழம் உழ்குமே 
      மூன்றே  கொழுங்கொடி வள்ளிகிழங்குவீழ்குமே
      நான்கே  அணிநிற ஓரிப்பாய்தலின்  மீது அழிந்து
      தினிநெடுங்குன்றம் தேன்சொரியுமே. (புறம் 109.கபிலர்.)  
      சிறுக்குழுக்களின் அடையாளரசியலும் நான்கு என்ற எண் கவனத்திற்குரியது.  
      களிறு மென்றிட்ட கவளம் போல
      நறவுப்  பிழிந்திட்ட கோதுடை சிதரல்
      வாரசும் பொழுகும் முன்றில்
      தேர்வீசு  இருக்கை நெடியோனகுன்றே. (புறம் 114.(கபிலர்.)  
      பெருவேந்தர்களின்  களிறுகள் சாறுப்பிழிந்திட்ட கரும்புச்சக்கைபோல நிலத்தை பாழ்ப்படுத்திவிட்டன என்கிறது இப்பாடல். பெருவேந்தர்களது படைவளத்தைப் பாடும் புலவர்கள் சிறுகுறுநிலக்குழுக்களின் நிலவளங்களைப் பாடியுள்ளனர்.  
      மட்டுமல்லாது  ஆசாகு எந்தை யாண்டுளன் கொள்ளோ
      இனி பாடுனரும் இல்லை பாடுனர்கு  ஒன்று 
      ஈகுனரும்  இல்லை பனித்துரைப் பகன்றை
      நரைகொள் மாமலர் சூடாது வைகியாங்கு பிறர்க்கு
      ஒன்று ஈயாது வியும் உயிர்தவ பலவே. புறம் 235. (ஔவையார்.)  
      இவ்வாறு பல கொடைப் பண்புகளையும் மிகுத்துப்பாடியுள்ளனர். சிறுகுறு அரசர்களின் நிலவளம், கொடைநலம் ஆகியப் பண்புகளிலிருந்து அவர்கள் நிலத்தோடும், நிலம்சார் மக்களோடும் கொண்டிருந்த உறவு புலனாகிறது. இச்சிறுகுறுநில குழுக்களையழித்து ஒற்றைப் பேரதிகாரத்தை நிறுவ ஒவ்வொரு வேந்தரும் முயற்சித்துள்ளனர். பெருவேந்தர்களின் இம்முயற்சி ஒற்றைத் தமிழ் மையத்தை நிறுவுவதற்க்கானவை. மூவேந்தர்கள் மட்டுமே நேரடியாக தமிழோடுத் தொடர்புப் படுத்திப் பேசப்படுகின்றனர். புறம்.19,50... “பெருங்கோயில், பெருங்கோட்டை, பெரும்படை, பெரும் நகரம் பின்பு பெரும் வன்முறை பெரும் அடக்குமுறை, இவையாவும் தமிழின் மரபுக்கு, தமிழ் தொன்மை சிந்தனைக்கு எதிரானவை. தமிழ் நிலவாழ்வின் பன்மையை அழித்து தமிழ் சமூகங்களின் விடுதலை உணர்வை அறப்பற்றை ஒழித்து தாமே தமிழின் தனியடையாளமாகும் என்று சொல்லிக்கொண்டவை இந்த வன்முறை மரபுகள்.” என்கிற பிரேம் ரமேஷின் கருத்தும் எண்ணத்தக்கது.  
சாதியச்சொல்லாடல் :  
      பண்டைய தமிழகம் இன்று இருப்பதை போல ஒருங்கிணைக்கப்பட்ட பகுதியாக இல்லாமல் சிறுசிறுக் குழுக்களாக இருந்தது. இதையொத்த கருத்தையே க. கைலாசபதி குறித்துள்ளார். (வீரநிலகவிதை ப.183.) கருத்தியல் அடிப்படையிலான சாதி மதம் போன்ற வடிவில் அமைப்பாக திறலுவதற்கான முயற்சி, தமிழின் தொன்மை சிந்தனையில் காணப்படவில்லை. அது பேரரசு உருவாக்கத்தோடு தொடர்புடையது. பெருவேந்தர்களின் பார்ப்பனிய தொடர்பால் காலூன்றியது எனலாம். சங்க காலத்தில் சமயம் என்ற ஓர் அமைப்பு பெரிய அளவில் இல்லையென்றாலும் அமைப்பாக்கத்திற்கான முயற்சியைக் காணமுடிகிறது. வைதீகத்தின் சார்பாக கவுணியன் விண்ணன்தாயன் உள்ளிட்டோரும் பிற பௌத்த சமயத்தாரும் வாதிட்டு உள்ளனர். (புறம்.166...கோவூர்கிழார்.) இதனை அமைப்பாக்க முயற்சிக்கான சான்றாக கொள்ளலாம்.
      புனிதம், தீட்டு என்கிற சாதிய ஒடுக்குமுறைக் கருத்தியலே பார்ப்பனிய சமயத்தின் மூலம் வந்ததாகும். சாதி என்ற சொல் தமிழ் சொல்லாக இல்லாதது போலவே சாதியம் என்கிற கருத்தும் தமிழ் நிலத்தில் தோன்றவில்லை. “கங்கைச் சமவெளியில் இந்தோ ஆரியப் பார்ப்பனிய பண்பாட்டுக் குழந்தையான சாதியம் தோன்றியது.” என குரியே குறிப்பிடுகிறார். “ஆரியரின் ஆயுத படையெடுப்போ கருத்துருவ மேலாதிக்கமோ தோன்றும் வரையில் அந்த அந்த பகுதிகளில் சாதியம் இல்லை.” தீபங்கர் குப்த்தாவின் இக்கருத்து இனைத்து நோக்கத்தக்கது. சாதியென்பது தொழிலடிப்படையில் தோன்றியதாக நம்புகின்றனர். அந்தனர், அரசர், அளவர், இடையர், இயவர், உப்புவணிகர், உமனர், உழவர், எயிற்றியர், கடம்பர், கடைசியர், கம்மியர், களவர், கிணைஞர், கிணைமகள்,  குயவர், குறத்தியர், குறவர், குரும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்பாகர், நுழையர், மோரியர், பரையர், பாடினி பானர், பானிச்சி, புலையர், பொன்செய் கொல்லர், பூவிலைப்பெண்டு, பொதுமகளிர், பொருணர், மடையர், மழவர், மறத்தியர், மறவர், மோரியர், யாழ்புலவர், யானைபாகன், யானைவேட்டுவன், வடுகர், வண்ணாத்தி, வணிகர், வலைஞ்ஞர், விலைப்பெண்டீர் வேடர்.” (உ.வே.சா.பதிப்பு புறம் ப.672). புறநானூற்றில் சாதி என்கிற உ.வே.சா.வின் இப்பட்டியல் கவனத்திற்குரியது. தொழில் குழுக்களோடு மோரியர், கோசர் ஆகிய அரசுகளையும் சாதியென்று எழுதியுள்ளார். தொழிலாளர்களைச் சுட்ட தமிழில் குடியென்ற சொல் இருந்தபோதிலும் இச்சொல்லை மிக கவனமாக தவிர்த்திருக்கிறார். புறநானூற்றில் குடியென்றசொல் 30 இடங்களில் நேரடியாக வந்துள்ளது. குடும்பம், பரம்பரை, அரசு, தொழில் ஆகிய பொருள்களில் ஆளப்படுகிறது. புனிதம், தீட்டு என்கிற கருத்தியல்  தொழிலாளர்களைத் தொடர்ந்து இழிவுப்படுத்துகிறது. தமிழில் உள்ள புலையன், புலைத்தி, இழிசினன் இவ்வகைப்பட்டதாகும். “எந்த நாகரிகச் சமுதாயத்திலும், தொழில் பிரிவினையோடு தொழிலாளர்களையே செயற்க்கையாக தனித்தனிப்பிரிவாக்கியதில்லை.” (அண்ணல் அம்பேத்கர் சாதிய ஒழிப்பு.. ப-42.) என்று அடையாளங் காணுகிறார் அண்ணல். “புலையர் என்பதற்கு பறைக்கொட்டுபவர், பிரமனின் நாபியிலிருந்து தோன்றியவர்கள்” என்று பொருளுரைக்கிறது அபிதானசிந்தாமணி. (ப-1628.) புலையன் என்பதற்கு ‘சண்டாளன்’ எனப் பொருளுரைக்கிறது  (ந. கதிரவேற்பிள்ளை தமிழ்மொழி அகராதி ப-1066.) “கட்டில் நினக்கும் இழிசினன் கையது போழ்தூண்து ஊசியின் விரைந்தன்று மாதோ.” (புறம் 82.) கட்டில் நினக்கும் தொழிலாளியை ‘இழிசினன்’ என்றது மேலும் ஆய்வுக்குரியது. இக்காலத்தில் தாழ்த்தப்பட்டோரைக் குறிக்கும் ‘தலித்’ என்றசொல்லுக்கு நேரான தமிழ் சொல் ‘புலையர்’ என்பதாகும். இச்சொல் புறநானூற்றில் ஐந்துப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. “துடியெறியும் புலையஎரிகோள் கொல்லும் இழிசின,” (புறம் 287.) “முருகுமெய்ப்பட்டப் புலைத்தி போல.”(புறம் 259.) “புல்லமத்திட்ட சில்வீழ்வல்சி புலையன் ஏவபுல் மேல் அமர்ந்து.” (புறம்360.) “பலர்ப்படு கூவல் புலைத்தி தோண்டி நாளும் புலைத்திக்கழீய தூவெள்ளருவை”(புறம் 311) துடியர், பறையர், வண்ணார், வள்ளுவர், வெட்டியான் ஆகியோரை புலையர் என அருவறுக்கிறது புறம். இதனையே பஞ்சமர் என அருவறுக்கிறது வடக்குப்பார்ப்பனியம். “பஞ்சமர் எனச்சொல்லப்படுவது யாரையென்பதே நமக்கு சரியாய் ஆதாரத்தின் மூலம் தெரிந்துக் கொள்ளக்கூடவில்லை. வழக்கில் சக்கிலி, பறையன், வண்ணான், நாவிதன், பள்ளன், குடும்பன், சாம்பன், வள்ளுவன் சிற்சில இடங்களில் தீயர், ஈழவர், நாடாரையும்மே சேர்த்து மேலே சொல்லப்பட்ட பிராமன சத்திரிய, வைசிய, சூத்திர ஆகிய நான்கு வருணத்தாரும் மேலே கண்டமுறைப்படி கொடுமையாக நடத்தப்படுவதை பார்க்கிறோம். இவர்களையே பஞ்சமர்கள் என்று சொல்லுவதையும் கேட்கிறோம். அப்படி நடத்தின போதிலும் சூத்திரர்கள் எனச் சொல்லப்படுகிற நாம் தாழ்ந்தவர்களா,  பஞ்சமர்கள் என்று சொல்லப்படுகிற அவர்கள் தாழ்ந்தவர்களா, என்பதை யோசித்துப் பார்த்தால் பஞ்சமர்களை விட சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் என்பது தெரியவரும். மேலே கூறப்பட்ட படி சூத்திரர் என்பதற்கு ஆதாரப்படி, ‘தாசிமகன்’ என்பதுதான் பொருள். தத்துவமாய்ப் பார்த்தால் பறையன் சக்கிலியை விட தாசிமகன் தாழ்ந்தவன் என்பதுதான் எனது தாட்ப்பரியம்.” (தந்தைப்பெரியார் பறையன் பட்டம் போகாமல் ப—4.)                                                                                              
      காரைக்குடி சில்லா முதல் மாநாடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாதியக்குழுக்கள் விதிக்கப்பட்டத் தொழிலிருந்து விலகிவிட்டால் ஆக்கமைய்யங்களின் சுகபோகம் பாதிக்கும் என்பதனால் சுத்தம் அசுத்தம் என்கிற கருத்து பரப்பப்பட்டு சாதியமைப்புக் காக்கப்படுகிறது. பரம்பரைத் தொழில் அல்லாத வேறு எந்தத் தொழிலையும் செய்வதற்கு அந்தத் தொழிலுக்கு ஆட்கள் தேவையாக இருந்தபோதிலும் கூட இந்துக்களை சாதியமைப்பு அனுமதிப்பதில்லை. தன் சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட  தொழிலை தவிர வேறு புதிய தொழிலை மேற்கொள்வதைவிட பட்டினிக் கிடப்பதேமேல். என்று ஒரு இந்து இருப்பதற்கு சாதியமைப்புதான் காரணம்”. என்கிற அண்ணல் அம்பேத்கரின் கருத்து மிகப் பொருத்தமானது. (சாதிய ஒழிப்பு-43.) புறநானூறுக் குறிப்பிடும் புnwயர் என்கிற கருத்தாக்கம், ஆரியர் தமிழரோடு கலந்த பிறகே ஏற்ப்பட்டிருக்கவேண்டும். “சாதியத்தை ஓரிணவகைப்பட்ட சித்தாந்தமாக காண இயலாது. இரண்டுவகையினங்களின் நீன்ட வரலாற்றுப் போக்கு இரத்தக்கலப்புக்கும், பண்பாட்டுக்கலப்புக்கும் உள்ளாகி இருப்பதை யாரும் மறுக்க இயலாது. மேலும் சாதியம் என்றும் நாம் குறிப்பிடும் பல்வேறு தனிதன்மைகளின் கூட்டு நிகழ்வானது ஆரியரும் திராவிடரும் கலந்து வாழும் பகுதியில் காணப்படுகிறது.” என்கிற கோ. கேசவனின் (சாதியம் ப.63.) இக்கருத்தும் தமிழின் சாதிய சொல்லாடலையறியத் துணைசெய்கிறது. நிறைவாக  தமிழென்பது சிலர் கருதுவதை போல எளிதானதாகவோ, ஒற்றைத் தன்மைக் கொண்டதாகவோ இல்லை. பல்லினக்குழுக்களின் குடிநிலரசுகள்-பேரரசுகள், இனக்குழுக்கள்—சாதியக்குழுக்கள், ஆற்றல்வழிபாடு—உருவவழிபாடு, வைதீகம்—அவைதீகம் என இவ்வாறு அரசியல் வடிவிலும், பண்பாட்டுவடிவிலும்,இணைமுரன்களாலான அதிசயம் தமிழென்பதை புறநானூறு காட்டுகிறது.
 

பயன்பட்டவை :
  1. அபிதான சிந்தாமணி.ஆ. சிங்காரவேலு முதலியார்       சீதை பதிப்பகம் 10ஆம் பதிப்பு 2010 சென்னை.
  1. கட்டுரையும் கட்டுக்கதையும் பிரேம்-ரமேஷ் மருதா வெளியீடு முதல் பதிப்பு 2006.
  2. சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் பெ. மாதையன் பாவை வெளியீடு முதல் பதிப்பு 2004.
  3. சாதியம் முனைவர் கோ. கேசவன்  சரவணபாலு பதிப்பகம் முதல் பதிப்பு 1995.
  4. சாதி ஒழிப்பு அண்ணல் பி. ஆர். அம்பேத்கர் வெளியீடு துடி இயக்கம் 2007.                    
  5. சாதியும் பால்நிலைப் பாகுபாடும் உமா சக்கரவர்த்தி தமிழில் வ. கீதா.
        பாரதி புத்தகாலயம் முதல் பதிப்பு 2008.
  1. தமிழ் மொழி அகராதி நா. கதிரைவேற்பிள்ளை  சாரதா பதிப்பகம் 6.ஆம் பதிப்பு 2011.
  2. பரையன் பட்டம் போகாமல்....தந்தை பெரியார் பெரியார் திராவிடர் கழக வெளியீடு முதல் பதிப்பு 2010.
  3. புறநானூறு பாகம் 1. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூன்றாம் அச்சு 2007.
  4. புறநானூறு பாகம் 2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூன்றாம் அச்சு 2007.
  5. வீரநில கவிதை கா. கைலாசபதி குமரன் புத்தகநிலையம்