வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஏப்ரல், 2011

49 ஓ - வாக்களிக்க விருப்பம் இல்லை வசதியில் திருத்தம் தேவை!

வாக்காளர்கள் மத்தியில், "யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது,'' என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார். தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, "49 ஓ' குறித்து தெரிவித்த கருத்து: சட்டசபை தேர்தலில், 78 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரும், ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்பது வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில், யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்கிற, "49 ஓ' பிரிவு, குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு செய்தித்தாள், ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் "49 ஓ' பிரிவு குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின், இந்த நடவடிக்கையால், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், "49 ஓ' பிரிவு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார்.

என்று நாளிதழ்களிலும் பிற இதழ்களிலும் செய்திகள் வெளியாகி பெருமையோடு மார்தட்டிக் கொள்கின்றன. இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் அதே சமயத்தில் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிர்பந்தமும் வாக்காளர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. பல சிரமங்களுக்குப் பிறகுதான் 49 ஓ வசதியைப் பயன்படுத்த முடியும். எழுத்து மூலமாக எழுத வேண்டும்.... கையெழுத்திட வேண்டும்.... வாக்காளர் 49 ஓ-வைப் பயன்படுத்துகிறார் என்ற செய்தி வாக்களிக்கும் அறையில் (Booth) உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. ஆனால்,  வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது மட்டும் மறைமுகமாக வாக்களிக்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 49 ஓவுக்கு மட்டும் என்ன அவலம்? செய்தி ஊர் முழுக்கத் தெரிய வருகிறது. தான் அளிக்கும் வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்ற ரகசியத்தைக் காக்க வேண்டியதும் தேர்தல் ஆணையத்தின் கடமை. இந்த அவலத்தைப் போக்க வேண்டும். அதாவது 49 ஓ வசதி வாக்குப் பதிவு எந்திரத்திலேயே ஒரு வசதியாக இருக்க வேண்டும். தவிர்த்து அறையில் உள்ள பணியாளர்களால் உதவப்பட்டு 49 ஓ வசதியைப் பயன்படுத்துமாறு இருக்கும் இந்த நிலைமை அடுத்த தேர்தலில் அல்லது பிற மாநிலத் தேர்தலில் கட்டாயம் மாற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் நம் தலைவர்களின்! உண்மை நிலையை உணர முடியும். மக்களின் மன நிலையை அறிய முடியும்.

3 ஏப்ரல், 2011

எண்ணங்கள் குருதியைப் பாதிக்கும்?

நம் எண்ணங்கள் நமது குருதியை பாதிக்குமா? அதன் மூலம் உடல் நலத்தைப் பாதிக்குமா? திருவள்ளுவர் தனது திருக்குறளில் நல்லவர்கள் தண்டனையை அனுபவிப்பதும் தீயவர்கள் சுகபோகமாய் வாழ்வதும் கண்டு ஆச்சரியப்படுகிறார். தர்மம்தான் ஜெயிக்கும் என்ற கோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் அவர். ஆனால், எக்காரணத்தால் தீயவர்கள் தண்டிக்கப்படாமல் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பது தெரியாமல் வியக்கிறார்.

'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது தமிழர்களிடையே வழங்கும் ஒரு முக்கியமான பழமொழி. இதன் தர்க்கமும் அப்படித்தான். தெய்வம் உண்டோ இல்லையோ.... கம்பர் வார்த்தையில் சொல்வதென்றால், 'இன்றே என்னின் இன்றேயாம்; ஆமென் றுரைக்கின் ஆமேயாம்!' காலகாலமாக விவாதிக்கப்பட்டு இன்று வரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிற இந்த விவாதத்திற்கு நாம் இங்கு வரவில்லை. மாறாக, கெட்ட எண்ணங்கள் எப்படிக் குருதியைப் பாதிக்கின்றன்? கெட்ட எண்ணம் கொண்டவன் எப்படிக் கெட்டழிவான் என்பது குறித்துதான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

அறிஞர் ஒருவர், நல்ல எண்ணம் உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கம். கெட்ட எண்ணம் ரத்தத்தை மாசுபடுத்தி உடலுக்குள் நோயினை உற்பத்தி செய்து கேடெண்ணம் கொண்டவனைச் சாகடித்துவிடும் என்று எழுதுகிறார்.

இந்த விடயத்தைப் பற்றிப் பேசுவதற்குப் போதுமான அறிவு எனக்கு இல்லைதான். ஆனால், அது எப்படிச் செயல்முறையாகிறது என்று எனக்குள்ளாகவே கேள்விகள் பலவற்றை எழுப்பி அதற்கான விடையையும் என்னால் அறிய முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

இந்த விடயமானது உளவியல் சம்பந்தப்பட்டது. உளவியலில் Reflection-பிரதிபலிப்பு சம்பந்தப்பட்டது. நோய்கள் கிருமிகளால் வருகின்றனு என்னும்  கருத்து மருத்துவ ரீதியில் 100% உண்மையானதாகவே கருதப்படுகிறது. ஆனால், உளவியல் ரீதியாக இந்தக் கருத்தில் முழு உண்மை இருக்கவில்லை.

மக்கள் மத்தியில் நோயானது இன்னும் பல வழிகளில் வருகின்றன என்னும் கருத்தை முற்று முழுதாக நம்பி வருகின்றனர். உதாரணமாக, காய்ச்சலைக் குறிப்பிடலாம். காய்ச்சல் எதன் மூலமாக வருகின்றது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், பயந்துவிட்டதால் காய்ச்சல் வந்துவிட்டதாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  பில்லி சூன்யத்தின் மூலமாகப் பித்து பிடித்தல் முதலான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக மக்கள் நம்புவது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இவைகள் எல்லாம் எப்படிச் சாத்தியமாகும்?

இதுகூட முற்று முழுக்க உளவியல் ரீதியாகவே நிகழ்ந்தேறுகின்றன. ஒருவர் ஒரு சிறிய பொய் ஒன்றைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அது பொய் என்று மற்றவர்கள் உணராதவாறு, உண்மைதான் என்று நம்பும்படியாகச் சொல்வார்கள்; அவர்களும் 100% உண்மைதான் என்று நம்பலாம். ஆனால், அது பொய் என்ற விடயம் சொல்பவருக்குத் தெரியாமல் போய்விடுமா என்ன? எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் கொண்டவராக இருந்தாலும் அவருக்கும் மனது என்பது உண்டுதானே? மனசாட்சி என்பது கண்ணிமை அளவாவது இருக்கும்தானே? அதுவே போதும் அவரைத் தண்டிப்பதற்கு.

ஆக, எண்ணங்கள் அவர் சிந்தனையைத் தூண்டுகின்றன. நல்லெண்ணமாக இருந்தால் மகிழ்ச்சியையும் கெட்ட எண்ணமாக இருந்தால் அவர் நலத்திற்கு எதிரான நிலையையும் ஏற்படுத்துகிறது. உள்ளிருக்கும் எண்ணங்கள் அவரது செயலை நிர்ணயிக்கின்றன. அவரது செயல் பிறரது மனதையோ அல்லது பிறவற்றையோ பாதிப்படையச் செய்கிறது. அந்தப் பாதிப்பின் மூலமாக எதிராளியின் செயற்பாடுகள் இவரை வந்தடைகிறது. நற்செயலாக இருந்தால் நற்பலனையும் தீய எண்ணமாக இருந்தால் எதிர்நிலைப் பலனையும் அடைய நேர்கிறது. இப்பொழுது சொல்லுங்கள்..... இது Reflection Theory மூலும் இயங்கக்கூடிய நியாயத் தீர்ப்புதானே?

எனவே, கெட்ட எண்ணம் கொண்டவர்கள் யாராலும் தண்டிக்கப்படாமலேயே தானே கெட்டழிவர். தூய எண்ணம் கொண்டவர்கள் மாசடையாத குருதியோடும் பாதிப்படையாத உடல் நலத்தோடும் வளமாகவே பல காலம் வாழ்வர். இந்த நியாயத் தீர்ப்பில் சிறிது கால இடைவெளியில் வேண்டுமானால் மேற்படி தர்க்கப்படி செயல்படாமல் போகலாம். ஆனால், இறுதியில் 'தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்' என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுப்படியே முடியும்.

25 நவம்பர், 2010

குலத்தொழிலா அரசியல்?

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சரின் புதல்வர் கொண்டாடிய பிறந்த தினவிழா, தனிப்பட்ட உரிமை சார்ந்தது. ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட ஊழியர்கள் அந்த விழாவுக்காக எடுத்துக்கொண்ட முயற்சி, பொது விவாதத்தைத் தூண்டுகிறது.

 மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளைஞர்கள் பலரும் வாரிசுகள் என்பதை தவிர, வேறு எந்தச் சிறப்புத் தகுதியையும் பெற்றிருக்கவில்லை. அரசியலின் பால் இளைஞர்கள்  ஈர்க்கப்படாமல், அரசியல் மாற்றங்களோ, நேர்மைக்கான போராட்டத்துக்கோ, உருவம் காணமுடியாது. எனவேசமூகத்தின் எல்லாத் தரப்பு இளைஞர்களும், என்ற வரிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது.

சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்தோர், கல்லூரிக் கல்வி போன்றவை கிடைக்காத காரணத்தால், அரசியலில் இருந்தாலும், பொறுப்புகளுக்கு வர இயலாதவர்களாக உள்ளனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டுவரும் வாரிசு அரசியலின் தாக்கம் காரணமாக, இளம் தலைமுறை  விவாதிக்க வேண்டியதன் அவசியம்  அதிகரித்து வருகிறது.

 ராஜாஜி 1952-ல், தமிழக முதலமைச்சராக இருந்தபோது குலக்கல்வித் திட்டத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் எந்த நோக்கத்தில் அறிமுகம் செய்திருந்தாலும், அன்றைய எதிர்க்கட்சிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, எதிர்ப்புத் தெரிவித்தன. மனிதன் செய்கிற தொழில்கள் ஜாதியப் பிரிவினையையும், அதன் காரணமாக சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளையும் உருவாக்கி வைத்தது. குலக்கல்வித் திட்டத்தின் மூலம், ஜாதிய அடையாளங்களைப் பள்ளிக் குழந்தைகள் பற்றி நிற்குமோ? ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் உணர்வு, குழந்தைகளிடம் வலுப்பெறுமோ? போன்ற கேள்விகள் காரணமாக, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே, குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டது.

 மன்னரின் வாரிசு மன்னர், மந்திரியின் வாரிசு மந்திரி, படைத்தளபதியின் வாரிசு தளபதி  என்ற நடைமுறை மன்னராட்சி காலத்தில் பின்பற்றப்பட்டது. இன்று நாம் மக்களாட்சி காலத்தில் வாழ்ந்து வருகிறோம். மக்களாட்சியின் மகத்துவம் பலதரப்பட்ட மனிதர்களும் அரசியலில் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதாகும். இந்திய சமூகத்தில் ஆதிதிராவிடர்களுக்கும், பழங்குடி மக்களுக்கும் நீண்ட நெடும் காலமாக அரசியல் தலைமை பொறுப்புகளுக்கு வரும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர்களின் பங்கேற்கும் உரிமையை, உறுதி செய்யும் விதத்தில், தனித் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் முறை, நமது நாட்டில் உருவாக்கப்பட்டது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், மகாத்மா காந்திக்கும், டாக்டர் அம்பேத்கருக்குமான விவாதங்களில், மிக முக்கியமானது இரட்டை வாக்குரிமை குறித்தது. இப்போது பெண்களும் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் நிலையை உருவாக்க, மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதம், பொதுத் தளத்தில் தீவிரமடைந்துள்ளதுமேற்படி இரண்டும் அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்ற ஜனநாயகத் தேவையில் இருந்து முன்வைக்கப்படுகிறது.

பொதுவாழ்வில் ஆட்சி செய்யும் உரிமையைப் பெறுதலும், ஆட்சி உரிமை பெற்று கடமைகளைச் செலுத்துதலும் உள்ளடங்கிய செயல்பாடுகளே அரசியல் என வரையறை செய்யப்படுகிறது. இதில் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற முறையில் ஜனநாயகம், குடியரசு ஆகிய சொற்கள் பலம் பெற்றுள்ளன. அது மட்டுமல்ல, முந்தைய மன்னராட்சி இன்றைய மக்களாட்சியைவிட பின்தங்கியது என விமர்சிக்கிறோம். காரணம் அன்று வாய்ப்பு சமமானதாக இல்லை என்பதாகும். இனக் குழுக்கள் என்ற நிலையில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், அதிகாரம் குழுத் தலைவரிடத்தில் மட்டும் இருந்ததில்லை. ஒரு கூட்டுக் குழுவினர் அதிகாரம் பொருந்தியவர்களாக இருந்தனர் என்ற விவரத்தை மானுடவியலாளர்கள் ஆய்வு மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்றைக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதியாக இருக்கும் ஆனைமலையில் வசிக்கும் மலைமலசர் என்ற பழங்குடி மக்களின் குடியிருப்பை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். 30 குடும்பங்கள் வசிக்கும் அந்தக் குடியிருப்பை 5 பேர் கொண்ட குழு நிர்வகிக்கிறது. ஒரே இனமாக இருந்தாலும், அவர்களுக்குள் உள்ள சந்ததி அடிப்படையில், 5 பேர் கொண்ட குழு ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. இன்றும் அதே நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். அவர்களுக்கு, ஊர் பெரியவர்கள் என்ற மரியாதையைத் தவிர, தனியாகப் பிரத்யேக சலுகைகள் எதுவும் இல்லை. அரசியல் இயக்கங்கள் இப்பழங்குடி மக்களை அணுக இயலாத அல்லது இவர்களின் எண்ணிக்கை வாக்கு வங்கி கணக்குக்கு உதவாது என்ற நிலையில், இம்மக்கள் தங்களின் பாரம்பரிய நிர்வாகத்தை இன்றளவும் பற்றி நிற்கிறார்கள். அதன் மூலம் தான் வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகளை எதிர்கொள்கின்றனர். இப் பழங்குடியினரின், இனக்குழு தலைமை, மன்னராட்சியைவிட மேம்பட்ட அணுகுமுறையைக் கொண்டதாகத்  தெரிகிறது. மன்னராட்சி முறையை, நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எதிர்த்த காரணத்தால், விடுதலை இந்தியாவில், மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. பின்னர் மன்னர்களாக இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட மானியமும்  ஒழிக்கப்பட்டது. இதை ஜனநாயகத்தின் வளர்ச்சி என்றே கருத வேண்டும்.

நாடு விடுதலை பெற்று 63 ஆண்டுகள் நிறைவுற்ற இன்றைய சூழலில், சிலர் அதே சந்ததி முறையைப் பின்பற்றினால், மக்கள், அரசியல் பங்கேற்பில்  இருந்து தங்களை விலக்கிக் கொள்வதற்குத் தூண்டப்படுகிறார்கள் எனப் பொருள் கொள்ளப்படும். வாரிசு முறையில் அதிகாரம் செலுத்திய, மன்னராட்சி காலத்திலும்கூட, மன்னன் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் பல வரையறுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

அத்தகைய வரையறைகளைப் பற்றி ஒழுகாத மன்னன் மதிக்கப்பட்டது இல்லை என்பதையும் சில வரலாற்றுத் தகவல்கள் மூலம் அறிகிறோம். வெ. சாமிநாத சர்மா இதுகுறித்து "புராதான இந்தியாவில் அரசியல்' எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் அரசனுடைய காப்பாற்றும் கடமையானது திருடர், கயவர் ஆகியோரிடமிருந்து, மக்களைக்  காப்பாற்றுகிற  போலீஸ் வேலையைச் செய்து வருவது மட்டுமல்ல. பசி, பிணி, அறியாமை, அநீதி ஆகியவை இல்லாது மக்களைக் காக்க வேண்டும். மக்களுடைய புறவாழ்க்கைக்கு மட்டுமல்ல, அகவாழ்க்கைக்கும் அரசன் பொறுப்பாளி. அகவாழ்க்கையைப்  பண்படுத்தவும், தூய நிலையில் வைத்திருக்க வேண்டியதும் அரசனின் கடமை என வரையறை செய்திருந்ததாக சாமிநாத சர்மா கூறுகிறார்.

மன்னருக்கான வரையறை, இளவரசர்களுக்கும் பொருந்தும் என்றும், இளம் வயதிலேயே பயிற்சி பெறும் விதத்தில் அன்றைக்கு ஏற்பாடுகள் இருந்ததையும் படித்து அறிய முடிகிறது. ஆனாலும் இன்று நாம் வாழ்ந்து வரும் ஜனநாயக அமைப்பைவிட, பின்தங்கிய நிர்வாக முறை என்ற கருத்துதான், மன்னராட்சி குறித்து நாம் அறிந்திருப்பது.

இத்தகைய மன்னராட்சி முறையில் இருந்த உரிமைகளை விடவும், கூடுதல்உரிமைகளுடன், பங்கேற்புடன் அரசை உருவாக்குகிறபோது தான், மக்களாட்சி முறை வளர்ச்சி அடைந்த சமூகமாக மாறும். ஆனால், இன்றைய அரசியலில், அக்காலத்திய வாரிசு அரசியல் மேலோங்கி வருவதைப் பார்க்கிறபோது, நம் சமூகம் பின்னோக்கிப் பயணிக்கிறதா எனும் கேள்வி, தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

வாரிசுகளாக அறியப்படுபவர்கள் அரசியல் தளத்துக்கு வருகிறபோதே, பிறந்த நாள் சுவரொட்டிகளுடனும், பிரம்மாண்டமான கட் அவுட்களுடனும்தான் பிரவேசிக்கிறார்கள். அல்லது அரசியலில் அமைச்சராக, நாடாளுமன்ற, சட்டமன்றப் பொறுப்புகளில் இருந்து மறைந்த காரணத்தால், நடத்தப்படும் இடைத்தேர்தலின்போது, வேட்பாளராக அரசியல் பிரவேசம் அரங்கேற்றப்படுகிறது. அனேகமாக இடதுசாரி அரசியல் இயக்கங்களைத் தவிர, பெரும்பான்மையான அரசியல் கட்சிகளில், வாரிசு அரசியல் பின்பற்றப்பட்டு வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் அரங்கேறிவரும், குடும்ப அரசியல் திடீரென்று அதிகரித்துள்ளது. அதுவும் 1990-க்குப் பின் தீவிர வேகம் பெற்று இருக்கிறது. குறிப்பாகசமூக நீதிக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட்டங்களில் ஈடுபட்ட மாநில அரசியல் கட்சிகளிலும், மத்திய அமைச்சராக இருந்து வரும், முதல் தலைமுறை அரசியல்வாதிகளின் குடும்பங்களில் இருந்தும் வாரிசு அரசியல் தீவிரமாகவும் வெளிப்படுகிறது.

அரசியலில் பெரும் பொறுப்புகளில் இருப்போரின் செல்வமதிப்பு உயர்ந்து வருவதற்கும், அரசியல் வாரிசு கொள்கையின் வளர்ச்சிக்கும் நெருக்கம் இருக்கிறது. இல்லையென்றால், கட்சியில் மிக உயர்ந்த பொறுப்பில் இல்லாத ஒருவரின் பிறந்த நாள், மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டிருக்குமா? வாரிசுகள் அரசியலில் ஈடுபடக்கூடாது என வாதிட விரும்பவில்லை. இளம் வயது தொடங்கி, அரசியலில் ஈடுபடாமல், நேரடியாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக வருவது அல்லது அரசியல் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவது, சம்பந்தப்பட்ட கட்சியினரால் கேள்விக்கு உள்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவரின் வாரிசு மருத்துவர், பொறியாளரின் வாரிசு பொறியாளர், வழக்குரைஞரின் வாரிசு வழக்குரைஞர், ஆசிரியரின் வாரிசு ஆசிரியர் எனத் தொழில்கள் பரம்பரை சார்ந்ததாக, நம் சம காலத்தில் வளர்ந்து வருகிறதுதனக்குப் பின் தனது வாரிசு, தான் உருவாக்கி வைத்த செல்வத்தைப் பாதுகாக்கும், தேவையில் இருந்து, தனது வாரிசுகள் தன் தொழிலைப் பின்பற்றும் வகையில், வாரிசுகளின் கல்வியில் கவனம் செலுத்துகின்றனர். இதுவே ஒரு புதிய வேலைப் பிரிவினை அல்லது குலக்கல்வித் திட்டம்போல் செயல்படுகிறது.

இந்நிலையில் அரசியல் தலைவரின் வாரிசும், அரசியல் தலைவராக அடையாளம் காட்டப்படுவது, அரசியல் குலத்தொழில் என்பதை நோக்கிச் சென்றுவிடும். இப்போது பெற்று இருக்கிற சமூக நீதி, பெண்ணுரிமை, தனித்தொகுதி ஒதுக்கீடு போன்றவை, மெல்லப் புதைக்கப்படும் என்பதை ஜனநாயக ஆதரவாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

(கட்டுரையாளர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்).

நன்றி: தினமணி 25 நவம்பர் 2010