வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

14 செப்டம்பர், 2011

தற்காலப் பார்வையில் திருக்குறளின் அநீதிகள்


இந்தியத் திருநாடு வள்ளுவர் காலத்திருந்த மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களை மக்களே ஆளும் மக்களாட்சி முறை (அ) குடியாட்சி முறை சென்ற நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. ‘மாற்றம் என்பது  மானுடத் தத்துவம்’ என்பார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எல்லாக் காலத்துக்கும் நிலைபெற்ற உண்மைகள்/நீதிகள் என்று ஒன்றுமே இல்லை. உண்மைகளும் நீதிகளும் காலத்துக்குக் காலம் இனத்துக்கு இனம் மொழிக்கு மொழி மாநிலத்துக்கு மாநிலம் நாட்டுக்கு நாடு மாறும் தன்மை கொண்டன. அதாவது, மாற்றம் என்பதே மாற்றம் இல்லாதது. இதில் உலகப் பொதுமறை, பொய்யாமொழி என்று நாம் வாயாறப் புகழ்ந்து மார்தட்டிக் கொண்டிருக்கும் திருக்குறள் மட்டும் விதிவிலக்கல்ல. ஒரு படைப்பாளன் தான் வாழும் காலத்தைத்தான் பிரதிபலிக்கிறானே ஒழிய நிலைபெற்ற உண்மையை அல்ல.

தமிழ்ச் சமூகத்தில் ஆகச்சிறந்த இலக்கியங்களில் தலையாயது திருக்குறள். தமிழ் மறை என்று மிக மிக உன்னத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது குற்றம் சுமத்துவதா? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.

உன்னதமான ஒரு கலைஞனை – அற்புதமானதொரு படைப்பாளனை, தமிழனை உலகப்பரப்பில் தலை நிமிரச் செய்ததில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கும் ஒரு புனிதனைக் கறைபடுத்தலாமோ என்கின்ற வாசிப்பாளராகிய உங்களுடைய தார்மீகக் கோபம் கட்டுரையாளருக்குப் புரியாமல் இல்லை. உங்களுடைய அளவு கடந்த கோபத்திற்கு கட்டுரையாளரின் சிரம்தாழ்ந்த நன்றிகளும் வரவேற்புகளும் உரித்து. நிற்க.

தலைமுறை இடைவளியை இட்டு நிரப்பும் மாயத்தகுதி எந்த ஒரு படைப்புக்கும் பூரணமாக அமையும் சாத்தியப்பாடுகள் இல்லை. ஆனால், ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் இவ்வையகமே’, ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’, ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை’ என்னும் கருத்துக்களோடு கட்டுரையாளருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதே சமயம், ஒரு மகன் தன் தந்தையின் தோளில் அமர்ந்து இந்த உலகத்தைக் காண்கிறான் என்பதையும் நினைவில் வைத்து நோக்க வேண்டும். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனும் குருவை மிஞ்சிய சீடனும் தமிழ்ப்பரப்பில் இல்லையா என்ன? அதற்காகக் கட்டுரையாளர் குருவை மிஞ்சிய சீடரா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். திருவள்ளுவரோடு ஒப்பிடும்போது அவர் முன்னால் நிற்கக் கூட யோசிக்க வேண்டிய நிலையில்தான் கட்டுரையாளர் இன்னும் இருக்கிறார். ஆனால், வெண்ணிலவில் களங்கம் இல்லையா என்ன? அப்பேர்பட்ட ஐந்தெழுத்து மந்திரத்துக்குச் சொந்தக்காரரான சிவபெருமானே தவறு செய்யவில்லையா என்ன? உங்களுக்குக் கோபப்படுவதற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதற்கு நிகரான உரிமை கட்டுரையாளருக்கும் கட்டாயம் உண்டு. கட்டுரையாளர் தனது தாத்தனை விமர்சிப்பதில் என்ன தவறு? வரலாறுகள் கட்டாயம் கீழிருந்தும் நோக்கப்பட வேண்டும்.

திருவள்ளுவர்
கற்பு
‘கற்பென்று சொல்ல வந்தார் – இரு
கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்’

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி.

‘கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை’

என்றார் அவ்வையார். இருவருமே ஆண், பெண் என்ற இரு இனத்தவருக்குமே சமமான நீதியைப் போதிக்கின்றனர். கற்பு என்பது பெண்ணுக்கானது மட்டுமல்ல. மாறாக, இருவருக்குமானதுதான் என்பது பாரதியின் வாதம். ஆனால், அவ்வையார் கற்பு என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் கருத்தையே விடுத்து கற்பு என்பதற்குப் புதிதான பொருளையே தருகிறார். கற்பு என்பது வாக்கு தவறாமை; சொன்ன சொல்லை மாற்றிப் பேசாமை என்று விளக்கம் கொடுக்கிறார்.

ஆனால், வள்ளுவர் மட்டும்தான் கற்பு என்பது பெண்களுக்கானது மட்டும்தான். கற்புடைய பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று பெண்களை உயர்த்துவதாகக் கூறி மறைமுகமாகத் தனக்கு அடிமைக்கிக் கொள்ளும் ஆணிய மனோபாவம் திருவள்ளுவர் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின்.

கடவுள் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

இதில் திருவள்ளுவரைச் சொல்லிக் குறையில்லை. கலைஞன்/கவிஞன் காலத்தின் கண்ணாடியாவான். திருவள்ளுவர் தனது காலத்தைப் பிரதிபலிக்கிறார். என்பதுதான் நிதர்சனம். கட்டுரையாளரின் கருத்துக்கு வளம் சேர்க்கும் இன்னொரு எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம். முலைமுகம் திருகி முக்கூடலை எரித்தாளாம் கண்ணகி. அவள் மார்பகம் என்ன பாஸ்பரஸ் கட்டியா? இதே போன்று திருவள்ளுவர் மனைவியாகக் கருதப்படும் வாசுகி குறித்த கதைகள் தமிழில் ஏராளம். அனைத்துக் கதைகளும் ஒட்டுமொத்தமாகக் கட்டுக்கதைகள் என்று புறந்தள்ளிவிடவும் முடியாது. ஆனால், கற்புத்தன்மையை உயர்த்திச் சொல்வதற்காக, பெண் இனத்தை எப்பொழுதும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்வதற்காக ஆணினத்தால் கையாளப்பட்ட மாபெரும் யுத்தி. இதே தன்மை கொண்ட கற்பை ஏன் ஆண் இனத்திற்கும் விதித்திருக்கக் கூடாது? கம்பர் இராமனுக்கு விதிக்கவில்லையா என்ன? அப்படி ஒரு ஆண் மகன் இருக்கின்றானா என்பது கேள்விக் குறியாக இருந்தாலும் அப்படிப்பட்ட ஓர் சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்ற கற்பனைச் சமுதாயம் கம்பருக்குத் தோன்றியிருக்கிறதல்லவா? கவிச்சக்கரவர்த்தி கம்பர் மீது இருக்கும் விமர்சனம் என்பது வேறு. அவர் கற்புத்தன்மையைச் சீதாபிராட்டிக்கு வற்புறுத்திய அளவுக்கு இராமபிரானுக்கு வற்புறுத்தினாரா என்பது ஐயப்பாடுதான்.

கண்ணகியின் கற்பை விதந்துரைக்கும் பலரும் கோவலனின் கற்புத்தன்மையைக் கேள்வி கேட்பதில்லை. பஞ்சவர் தேவி பாஞ்சாலியை ஆராயும் பலரும் அருச்சுனனின் ஆண்மை குறித்துத்தான் புளகாங்கிதம் அடைகிறார்கள். இதே மனநிலைகளில்தான் திருவள்ளுவரும் இயங்கியிருக்கிறார்.

ஒரு படைப்பாளன் காலத்தைப் பிரதிபலிப்பவன் மட்டும் அல்லன். காலத்தையே உருவாக்கும் தகுதிப்பாடும் கொண்டவன். தன்னால் காலத்தைப் படைக்க முடியாமல் போனாலும் கம்பன் முயற்சித்த மாதிரி திருவள்ளுவர் முயற்சித்திருக்கலாம். இப்படி விவாதிக்கும்பொழுது கம்பர் பெரியவரா வள்ளுவர் பெரியவரா என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். கட்டுரையாளரின் நோக்கம் இங்கு என்னவென்றால் திருவள்ளுவர் ஒருதலைச்சார்பாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதை நிரூபணம் செய்வது மட்டுமே.

கல்வி

‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்று கூறும் வள்ளுவர் கருத்தோடு யாரும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க முடியாது. கற்றவருக்கு இருப்பதுதான் கண். கல்லாதவருக்கு இருப்பது புண்ணாகும் என்பதைக் கூட ஏற்றுக்கொள்வார்கள். இங்கே ஒரு கேள்வி. திருவள்ளுவரின் காலத்துக்கு முன்பும் திருவள்ளுவரின் காலத்திலும் எத்தகைய சமூகம் தமிழ்ச் சூழலில் நிலவியது? கல்வி பெறும் உரிமை யார் யாருக்கு வரையறுக்கப்பட்டது? எத்தனைச் சதவிகித மக்கள் கல்வி கற்றார்கள்?

நூல்களின் மூலமாகக் கற்றறிவது கல்வி. ஆசிரியர்கள் மூலமாகக் கேட்டு அறிந்து கொள்வது கேள்வி. கல்வியும் கேள்வியும் இரண்டுமே அறிவு எனும் புள்ளியில்தான் சங்கமிக்கின்றன. அதனால்தான் அறிவுடைமை அதிகாரம் இந்த இரண்டு அதிகாரங்களுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ளது. கல்விக்கும் கேள்விக்கும் இடையில் இருக்கும் கல்லாமை எனும் அதிகாரத்தில் நிறைய கேள்விகள் அநீதையைப் போதிப்பதாகவே உள்ளன. குல/பொருளாதாரக் காரணங்களால் ஒருவன் படிக்க முடியாமல் போனாலும் பட்டறிவில் ஏட்டுப் படிப்பாளியைக் கட்டிலும் சிறந்த அறிவு பெற்றிருக்கும் ஒருவன் மற்றவரால் போற்றப்படமாட்டான்.

கல்லாதான் ஒட்பங் கழிய நன்றாயினும்
கல்லார் அறிவுடை யார்.(404)

பல்வேறு இயலாமைகளால் படிக்கும் வாய்ப்பிழந்த ஒருவன் தானே முயன்று அறிவாளியாகின்றான். அவனை ஏன் அறிவாளியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது? இந்த இடத்தில்தான் சிக்கலானதும் அநீதியானதுமான முடிச்சு போடப்பட்டிருக்கிறது. கட்டுரையாளரின் கேள்வி என்னவென்றால் பட்டறிவால் அறிவாளியான ஒருவனை ஏன் நாம் அறிவாளியாக ஏற்றுக் கொள்ளக் கூடாது? எளிதில் கிடைக்கும் வாய்ப்புகளால் அறிவாளியான ஒருவனைக் காட்டிலும் அரிதின் முயன்று பெரும்பாடு பட்டு அறிவைப் பெறும் ஒருவனைத்தானே பாராட்டி வரவேற்க வேண்டும்? அதைவிடுத்து அவனைப் புறமொதுக்குதல் என்ன விதமான அரசியல்? திருவள்ளுவர் இந்த இடத்தில் வெகுசன மனோபாவத்தை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்.  அதாவது அநீதிக்குப் பாடுபட்டிருக்கிறார். இந்த இடத்தில் துரோணாச்சாரியார் தன் மாணவன்(!) ஏகலைவனுக்கு இழைத்த கொடூரமான பாவம்தான் நினைவுக்கு வருகிறது. பாவம் இழைத்த துரோணாச்சாரியாரும் திருவள்ளுவரும் வேறல்லர். ‘கற்கை நன்றே! கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே! என்னும் வாக்குப்படி கர்ணன் பரசுராமரிடம் ஒரே ஒரு பொய்யைச் சொல்லி பாடம் கற்றுக் கொள்கிறான். உண்மை வெளியான பிறகு பரசுராமர் செயல்பட்ட அதே தன்மையில்தான் திருவள்ளுவரும் இங்குச் செயல்படுகிறார். அநீதியை அரங்கேற்றிய பரசுராமரும் திருவள்ளுவரும் வேறல்லர்.

இதையும் தாண்டி மாபாதகச் செயலைத் திருவள்ளுவர் செய்யத் துணிகிறார். கல்வியறிவில்லா அப்பாவி மக்களைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுவது போன்று இருக்கிறது அவரது வாக்கு.

செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.(420)

கேள்வியறிவு இல்லாத மக்களை இந்த உலகத்தில் வாழ்வதே வீண்; இருந்தாலும் ஒழிந்தாலும் ஒரே தன்மையதே என்று அறிவுறுத்துகிறார். இந்திய தேசத்தில் எத்தனை பேருக்குக் கேள்வி அறிவு வாய்த்திருக்கிறது? அறிவு பெறும் உரிமை எத்தனை பேருக்கு இருந்திருக்கிறது? திருவள்ளுவர் காலத்திலும் சரி. தற்காலத்திலும் சரி. கேள்வி அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை சதவிகிதம்? அவர் காலத்தில் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் கூட இருந்திருக்க முடியாது. மீதி இருக்கும் 90 விழுக்காட்டினர் இந்த உலகத்தில் வாழவே கூடாதா? கல்வி அறிவு பெற முடியாத சமூகத்தில் இந்த மக்கள் உயிர் வாழத் தகுதி அற்றவர்களா? அப்படி என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்? சமூகக் கட்டுப்பாடுகளை மீறி அறிவு பெற்றாலும் சூழ்ச்சியால் பழி வாங்கப்படுவார்கள். ஏகலைவனும் கர்ணனும் இப்படித்தானே பழிவாங்கப்பட்டார்கள்? இதற்குப் பெயர்தான் உலகப் பொதுமறையா?

ஒரு சமூகத்தில் இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சமமான உரிமையையும் சம அளவிலான வாழ்வாதாரத்தையும் நிலை நிறுத்தச் செய்வது ஆட்சியாளரின் கடமையாகும். அந்தக் காலத்தில் மக்களின் பிரதிநிதியான மன்னனது கடமையாகும். மக்கள் கல்வி அறிவு பெறச் செய்வதும் ஒரு மன்னனின் தலையாயக் கடமைகளில் ஒன்றாகும். அந்த உரிமையை நிலைநிறுத்தாத மன்னன் இருந்தாலும் இறந்தாலும் ஒன்றுதான் என்று கூற வேண்டிய வள்ளுவர் ஏன் தனி மனிதனை இப்படிச் சாடுகிறார்? அறிவு பெறும் உரிமை இல்லாத மக்களை சாகச் சொல்வதில் இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர் எந்த மனோபாவத்தில் செயல்பட்டார்? எல்லா மக்களுக்கும் பொதுவான உரிமை இல்லாத அந்தச் சமூகத்தைச் சாட வேண்டிய பொறுப்புள்ள மனிதர் தனி மனிதனை ஏன் சாகடிக்க வேண்டும்? திருவள்ளுவர் இந்த இடத்திலும் ஒருதலைச் சார்பாகவே செயல்பட்டிருக்கிறார். அநீதிக்குத் துணைபோயிருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிறது. நிற்கட்டும்.

அரசியல்

நாட்டார் வழக்காற்றில் (Folklore) ‘ஆண்டிக்கு ஒரு சட்டம் அம்பாரத்துக்கு ஒரு சட்டமா?என்று பேசுவதைக் கேட்டிருப்போம். ஆண்டி வேறு; அம்பாரம் வேறு அல்ல. இருவரும் சமமாக மதிக்கத் தக்கவர்களே; இருவரும் மனிதர்களே. இப்படி இருக்கும்பொழுது திருவள்ளுவர் பல இடங்களில் அரசனை இறைவன் என்றே குறிப்பிடுகிறார். அந்தக் காலத்தில் மக்களைக் காத்தவன் அரசன்தான். அதனால்தான் அரசன் இறைவனுக்கு நிகராக வைத்து மதிக்கப்பட்டான் என்று நாம் சமாதானம் செய்து கொள்ளலாம்.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (
புறம்.312)

இந்தப் பாடலில் குலத்தொழில் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பாடலின் ஆசிரியர் பொன்முடியாரின் மூலமாக ஒரு பெண் குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறாள். மற்ற சமூகத்தினருக்கு அவரவர் குலத்தொழிலே கடமை. ஆனால் வேந்தர்க்கோ ‘நன்னடை நல்கல்கடனாக வைக்கப்பட்டுள்ளது. இதை இன்றைய கண்ணோட்டத்திலிருந்து நோக்கிப் பார்க்க வேண்டும். ஒரு பெண் நாடாளக் கூடாதா? அல்லது கொல்லன்தான் நாடாளக் கூடாதா? இதிலும் சமாதானம் செய்து கொள்ளலாம். கொல்லன் நாடாளும் பொழுது அவனும் அரசனாகிரானே… அப்பொழுது அவனுக்கும் நன்னடை நல்கல்தான் கடமையாக வைக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று கேட்கலாம். ஆனால், கொல்லன் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படுவானா? இல்லை அரசன் வேல் வடிக்கச் செல்வானா? இந்த மனநிலைகளில்தான் திருவள்ளுவரும் அப்பட்டமாகச் செயல்பட்டிருக்கிறார். ஆண்டிக்கு ஒரு சட்டம்; அம்பாரத்துக்கு ஒரு சட்டம்தான் இருக்க வேண்டும் என்கிறார். இனக்குழுச் சமூகம் உருவான போது அரசன்/மன்னன் என்பவன் வானத்திலிருந்து புதிதாகக் குதித்தவன் அல்லன். மக்களோடு மக்களாக வேறுபாடு அற்று வாழ்ந்தவன்தான் இனக்குழுத் தலைவன். காலப்போக்கில் அவனே தன்னைக் இறைவனாக்கிக் கொண்டான். மக்களுக்காகத்தான் மன்னன் என்னும் நிலை மாறி மக்கள் மன்னனுக்காகவே என்று நடந்து கொண்டான். இல்லையெனில் மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்க மாட்டானா? எதற்குத் தனக்கு மட்டும் சுகபோக வாழ்க்கை?

பெண்வழிச் சேறல்

இன்றைய சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சரி நிகராக நோக்கப்பட வேண்டியவர்கள். ‘ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.’ ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்ற கும்மியடிஎன்று பாரதியார் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நீங்கி வெளியுலகுக்கு அடியெடுத்து வைக்கும்படி பெண்களை வரவேற்கிறார்.

ஆனால், திருவள்ளுவர் பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் இருக்கும் பத்து குறளிலும் ஒரு ஆண் எந்தக் காரணம் கொண்டும் பெண்களின் பேச்சைக் கேட்டு நடக்கக்கூடாது என்று அறிவுரை புகட்டுகிறார். அப்படிக் கேட்டு நடந்தால் என்னென்ன அசம்பாவிதங்கள் நேரும் என்றும் ஒன்றன் பின் ஒன்றாகப் பட்டியலிடுகிறார். பெண்ணை இழிவுப் பொருளாகப் பார்க்கும் போகப் பொருளாகப் பார்க்கும் மனோபாவம் திருவள்ளுவர் மனத்திலும் இழையோடியிருக்கிறது என்பது இந்த அதிகாரத்தின் பத்து குறள்களும் அத்தாட்சியாக நிற்கின்றன.

உண்டிச் சுருங்குதல் பெண்டிற்கழகு, தையல் சொல் கேளேல் என்று ஒரு தையலே கூறுகிறாள். அவள் பெயர் அவ்வையார் என்று பிற்காலத்தில் அறியப்பட்டது. ஆனால், தையல் சொல் கேட்டு உருப்படி இல்லாமல் போயிற்றா சங்க காலத்தில்? அதியமான் அவைக்களத்தில் அரசவைப் புலவராக அவ்வையார் அலங்கரிக்கவில்லையா? அரசாட்சியைச் செம்மாந்து நடத்த அவ்வையார் உறுதுணை புரியவில்லையா? கல்வி கற்று ஒரு ஆணுக்கு நிகராக அரசவையில் அமரவில்லையா? பெண் என்பவள் ஆணைவிடத் தாழ்ந்தவள் என்ற எண்ண ஓட்டம் திருவள்ளுவர் மனத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் குறள்களில் கொட்டிக் கிடக்கின்றன. பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்கள் தங்கள் பெயரை அவ்வையார் என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டனர். சங்க காலத்தில் இருந்த அவ்வையார் வேறு. தையல் சொல் கேளேல், உண்டிச் சுருங்குதல் பெண்டிற்கழகு என்று கூறும் அவ்வையார் வேறு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

வரைவின் மகளிர்

எல்லாச் சமூகத்திலும் விலை மகளிர் தாழ்மையான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறார்கள். அதே கண்ணோட்டத்தில்தான் திருக்குறளும் வரைவின் மகளிர் அதிகாரத்தில் வெளிப்பட்டிருக்கிறது கொஞ்சம் நாசூக்காக. ஆனால், திருவள்ளுவர் அவர்கள் அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணத்தையும் ஆராய்ந்து அதற்கு விடிவும் சொல்லியிருக்கலாம்.

கால்பார் கோத்து ஞாலத் தியக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறின் றாகி ஆறினிது படுமே…… (புறம்.185, புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.     (மேற்படி, புறம் . 187)

என்ற இரண்டு பாடல்களும் அரசனும் அவ்வந்நாட்டில் வாழும் ஆண்களும் தங்கள் ஒழுக்கத்தில் நேர்மையாகவமு நல்லவராகவும் இருந்தால் பெண்களும் ஒழுக்கத்துடனேயே நடந்து கொள்வார்கள். அவர்கள் முறை தவறி நடக்கும்பொழுது பெண்களும் தங்கள் ஒழுக்கம் கெட நேர்ந்து விடுகிறது எனப் பேசுகிறது. ஒரே ஒரு குறளிலாவது திருவள்ளுவர் இப்படிப் பேசியிருக்கலாம். வரைவின் மகளிர்கள் இருப்பதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. அந்த நாட்டு அரசனும் அவ்வந்நாட்டு மக்களுமே காரணமாக இருக்கிறார்கள். ஆனால், கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஏனெனில், எந்த அளவுக்குக் கேவலமாகப் பேச முடியுமோ அந்த அளவுக்குப் பெண்களைச் சித்தர்கள் பேசி விட்டார்கள். சித்தர்களோடு ஒப்பிடும்பொழுது திருவள்ளுவர் எவ்வளவோ மேம்பட்டவர்.

கொடிய மாதர்கள் இடையுறும் நரகக்
குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
கடிய வஞ்சனை யால்…..

பேதை மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
வாதை உற்றிட வைத்தனை ஐயோ….. ( திருவருட் பிரகாச வள்ளலார், பா. எண்:1008, 1009 இரண்டாம் திருமுறை)

மலம்சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
       சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்
இத்தை நீங்கள் இனிது என வேண்டா… (பட்டினத்தார், சித்தர் பாடல்கள், ப.205)

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு (மேற்படி, ப.209)

இப்படியெல்லாம் ஏசாமல் நாசூக்காக உணர்ச்சியற்ற பிணம் என்பதோடு நிறுத்திக் கொண்டார் என்ற அளவில் கொஞ்சம் மகிழ்ச்சி அடையலாம்.

அவையஞ்சாமை

தற்காலத்தில் அரவாணி, திருநங்கை என்ற சொற்களால் குறிப்படப்படும் ஆணியல்பும் பெண்ணியல்பும் கலந்த நம்மிடையே வாழும் ஒரு இனத்தவரை இழிவு படுத்தும் நோக்கில் திருவள்ளுவர் அவையஞ்சாமை அதிகாரத்தில் எழுதியுள்ளார். சமீப காலங்களில் இவர்களும் சம மதிப்புடைய மூன்றாவது பாலினமாக நோக்குவது இங்குக் குறிப்பிடத்தக்கது.

பகையகத்துப் பேடிகை ஒள்வாள்; அவையகத்து
அஞ்சும் அவன்கற்ற நூல்.(727)

மேற்படி கட்டுரையில் நாம் கண்ட அனைத்தும் ஒரு அறிமுக நிலையிலேயே அமைகிறது. இக்கருத்துக்களில் குறைபாடுகள் காண்பவர்கள் உணர்த்தினால் நல்லது. இறுதியாக, சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. (118) என்று கூறிய திருவள்ளுவர் தன் மனதறிந்து இது வரை நாம் மேற்கண்ட அநீதிகளை எழுதியிருக்க மாட்டார் என்று நம்பலாம். காலத்திற்கு ஏற்றாற் போன்று சில கருத்துக்களில் மாற்றங்கள் எல்லாவற்றிலும் ஏற்படக்கூடும். அதில் தமிழின் மிக முக்கிய இலக்கியமான தமிழனைச் தலைநிமிரச் செய்த அற்பதப் படைப்பான திருக்குறளும் விதிவிலக்கல்ல.

‘தமிழ் நூல்கள் எதற்கும் கிடைக்காத அங்கீகாரம் திருக்குறளுக்குக் கிடைத்தது. தமிழ்ச் சமூக வரலாற்றில் ஏற்பட்ட ஒவ்வொரு கட்ட மாற்றத்திலும் திருக்குறள் வேறு வேறு கண்ணோட்டத்தில் உள்வாங்கப்பட்டதை அறிகிறோம். இத்தன்மை இப்பனுவலுக்கு உருவான பின்புலம் குறித்துப் பல கோணங்களிலும் உரையாடுவதற்கு வாய்ப்பு உண்டு. (ப.148, திருக்குறள்: பன்முக வாசிப்பு) என்று கூறும் டாக்டர் வீ. அரசுவின் கருத்து இங்கே நினைவு கூறத்தக்கது. திருக்குறள் எந்தக் கண்ணோட்டத்தில் நோக்கினாலும் அந்தக் கண்ணோட்டத்திற்குத் தகுந்தபடி நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டது. அந்த அளவுக்கு மிகச் சிறந்த இலக்கிம் திருக்குறள். இதை நினைத்து நாம் திருக்குறளை மேலும் சிறப்புறச் செய்வோமாக. அதே சமயம் மேற்படியான சில கருத்துக்களை வாழ்க்கையில் (திருக்குறளில் திருத்த முடியாது. அதற்கு உரிமையும் கிடையாது.) திருத்திக் கொள்வோமாக. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இம்மியளவு கூடப் பாகுபாடு இல்லாது வாழும் ஒரு சமூகத்தைப் படைப்போமாக.

உசாத்துணை நூல்கள்:

திருக்குறள்: பன்முக வாசிப்பு
பதிப்பாசிரியர்: வெ. பிரகாஷ்
வெளியீடு:
மாற்று, 176, Q பிளாக்,
தொல்காப்பியர் தெரு,
எம்.எம்.டி.ஏ. காலனி,
சென்னை-106.

சித்தர் பாடல்கள்
ஆசிரியர்: மானோஸ்
வெளியீடு:
பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்கு வீதி,
மயிலாப்பூர், சென்னை-4.

திருக்குறள்-ஆராய்ச்சிப் பதிப்பு
பதிப்பாசிரியர்: கி.வா.ஜகந்நாதன்
வெளியீடு:
இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம்,
பெரியநாயக்கன் பாளையம்,
கோயம்புத்தூர்-641020.

25 ஜூலை, 2011

வீரப்ப சுவாமி கதைப்பாடல்


பாண்டவ பத்தினியின்
முடிவுறாப் புடவையாய்
முன்னால் கிடக்கும்
இருபது முப்பது வருடங்கள்
கற்பனைகளின் சுழல் கரத்தால்
சிக்கென்று இழுக்கப்பட்டன

முதுகுக்குப் பின்னால் ஓடி விழுந்த பின்னர்
சரீரம்
சண்டமாருதத்தின் மேல் ஆரோகணித்து
தமிழகத்தின் மேடு பள்ளங்களில்
முகம் புதைத்துக்
காமம் தணிக்கப் புறப்பட்டது

சிங்காரச் சென்னையில் புறப்பட்ட பயணம்
மதுரை, கன்னியாகுமரி,
ஊட்டி, கொடைக்கானல் எனத் தொடர்ந்ததில்
கால்வாசிக் காமம் கரைந்து போனது

வித்தியாசமாய் இருக்கட்டும் எனும் நினைப்பில்
மாதேஸ்வரன் மலை
திம்மம்
சத்திய மங்கலம் பகுதிகளில்
கால் பாவுகையில்
காதில் புகுந்த வண்டொத்த ஓசை
எஞ்சிய காமத்தை எரித்துப் போட்டது

ஓசையின் இசையிலும் பொருளிலும் லயித்த என்மை
அதனில் மயங்கிப் போனது

சிங்கம் ஒன்று ஜனனம் கண்டதாய்த்
தொடங்கிய கதை
சிறுநரி பலதால் வஞ்சிக்கப்பட்ட
இசையில் மிதந்தது

தம்மினம் தழைக்க வித்திட்டுவிட்டு
நெஞ்சுரம் கொண்ட நிகரற்ற சாமியாய்
மூலக்காட்டில் குடிகொண்டதாய்
முடிந்ததந்த கதைப்பாடல்.

குறிப்பு: சந்தன மரக் கடத்தல் வீரப்பன்(!) சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவத்துக்காக 04-11-2005 அன்று எழுதப்பட்டது.

23 ஜூலை, 2011

ஒரு ஆல மரம் சாய்கிறது...!


அப்பாவி யாய்நின்ற ஒருவன் – அவன்
சொப்பனத்தில் கப்பலிட்ட ஒருவள் – அதைத்
தப்பாமல் துளைபோட்டு
அப்பாலே கவிழ்த்திட்டு
மறுத்தேன் – மனம் – வெறுத்தேன்.

ஐந்தாண்டு தாண்டியபின் மணப்பேன் – பின்
ஐயமேதும் இல்லாமல் அணைப்பேன் – இதை
ஒப்பினால்நான் காதலிப்பேன்
ஒப்பவில்லை என்றாலோ
காதல் – அது – போதல்.

என்றபடி கூறினாலும் நின்றாள் – எனை
எண்ணூறு பாகமாய்க் கொன்றாள் – மனம்
காதலெனுங் கொடியேற
காமமெனும் மலையேறும்
தேகம் – என் – ஆகம்.

முத்தங்கள் பன்னூறு பகிர்ந்தோம் – இரு
முந்நூறு நாட்களுடல் வகிர்ந்தோம் – என்
ஓதற்கா ரணம்பற்றி
ஓரிருதிங் கட்பிரிய
மறந்தாள் – காதல் – துறந்தாள்.

கடிதங்கள் எத்தனையோ விடுத்தேன் – அதில்
காமத்தை எழுத்தாகத் தொடுத்தேன் – ஒரு
இடிநாளில் இன்னாத
எழுத்தென்னும் விஷக்கடிதம்
வந்தது – திகில் – தந்தது.

கர்த்தருக்கோ அடித்த ஆணி கையில் – என்
கண்மணியோ இதயத்தின் மெய்யில் – அவள்
நர்த்தனம்பு ரிந்தபடி
நடமாடு கிறாளென்னுள்
மயிலாய் – மொழி – குயிலாய்.

இந்தவேளை முதலாய்ச் சகோதரி – எனை
எப்போதும் வெறுக்காமல் ஆதரி – என
பந்தபாசம் அத்தனையும்
பாராமல் சொன்னாள் “நான்
நண்பி” – நானோ – வெம்பி.

உன் பெயரன் அழுகின்றேன் ஆயா – எனை
உமாவோடு சேர்த்தேவைப் பாயா? – என்று
நன்பல்லி குரல்கேட்டு
நாத்திகத்தை மறந்தபடி
கெஞ்சுவேன் – பசியால் – துஞ்சுவேன்.

வானின்கண் தோன்றும்வில் இல்லை – உயிர்
வஞ்சிமறத் தற்பெரிய தொல்லை – உடல்
ஊனின்றி உயிரின்றி
உலவலாம்உன் நினைப்பின்றி
நடக்காது – அடி – கடக்காது.

வாழ்வென்றால் உன்னோடொன் றாவேன் – அதில்
மாற்றமென்றால் மணக்காமல் சாவேன் – இப்
பாழ்மனத்தால் பிறிதுமொரு
பாங்கான பெண்நினைக்க
மாட்டேன் - உறுதி - வேட்டேன்.

11 மே, 2011

பூச்செடியில் பூக்கும் நஞ்சு

கைராசியோ முகராசியோ
தோட்டத்து மண் ராசியோ
எதுவெனத் தெரியவில்லை
என் தோட்டத்தில் வைக்கும்
எந்தச் செடியும் செழிப்பதில்லை
விலக்காக இரண்டு மாதத்திற்குமுன் பதியமிட்ட
குண்டுமல்லிக் கொடியொன்று
மண்ணோடு உறவு கொண்டது
அதில் உயிர்த்தெழும்
ஒவ்வொரு தளிரும் தன் பரப்பில் நெய்யேந்தி
என் மகிழ்ச்சியில் சொரியும்
இடையில் வாடிப்போகும் சமயங்களில்
வானத்தைச் சபிப்பேன்
அலுவல் முடிந்து வீடு திரும்ப
உண்ணுவதில்லை உறங்குவதில்லை
ஒரு குழந்தையைக் கையேந்திக்
கொஞ்சுதல் போல
அதன் தளிர்கள் கன்னத்தோடேற்படுத்தும்
உரசல் ஏதோ கிளுகிளுப்பை மூட்டும்
என் உணவில் பாதியை
அதற்குப் பகிர்ந்தளிப்பேன்
என் படுக்கையில் அதற்கும் இடம் கொடுப்பேன்
என் சுவாசத்திலும் பாதியை அதற்குப் பிரித்தளிப்பேன்
ஏங்க ஏங்க வைத்துவிட்டு
நெடுநாளைக்குப் பிறகு
ஒரே ஒரு போதினைப் பிரசவித்தது
அன்று முதல் அலுவலுக்காக
வெளியில் செல்வதற்கும்
எனக்கு விருப்பமில்லை
நிறைமாத கர்ப்பிணி மீது கொள்ளும் கவனமென
இப்பொழுது அதன் மீதுள்ளது
என் கவனமெல்லாம்
நள்ளிரவில் மேகம் சூழ்ந்து
மழை தன் வரவைக்
குளிர்க் காற்றிடம் சொல்லியனுப்பியது
மொட்டை முகிழ்க்கத் தொடங்கி
சிலு சிலுவெனத் தன் உடலைச்
சிலிர்த்துக் கொண்டது
மகிழ்ச்சியால் செடியை வெளியில் விட்டு
என்னை உள்ளுக்குள் பொதித்துக் கொண்டேன்
விடிந்தெழுந்து கவனம் கொண்டு
முதல் வேளையாய் வெளியில் பார்க்கிறேன்
ஒரு கொலைச் சம்பவத்தைக் கண்ட
பதை பதைப்பு என்னுள்
மழை கொன்ற அரும்பைக்
கையிலெடுக்கிறேன்
சேறெல்லாம் அப்பிக் கொண்டு
செஞ்சிவப்பில் நஞ்சேறிக் கிடக்கிறது.

10 மே, 2011

அறைக்குள் இறைந்து கிடந்தவன்


ஜனசஞ்சாரமற்ற புறவழிச்சாலையொன்றின் வழியே
கருக்கிருட்டில் சிகரெட் சினேகிதனோடு உரையாடியபடியே
வாயோடு வாய் வைத்த முத்தக் காட்சிகளை
இலவசமாய் ரசித்து
பறக்கும் ரயில் பிடித்து அறையை அடைந்தேன்
அவ்வறைக்குள் நுழையும் முன்பாகவே
அங்கொரு சக்திவேல் இறைந்து கிடந்தான்
இங்கென்ன ஆச்சரியம் என்றால்
அவன் எப்படி உள் நுழைந்திருக்க முடியும் என்பதே
பூட்டிய கதவு பூட்டியபடியே கிடக்கிறது
வெளிப்பூட்டோடு
ஞாபக மறதி அதிகம் என்பதால்
ஒரு முறைக்குப் பல முறை
ஆராய்ந்துதான் அறையைக் காலையில் பூட்டினேன்
தலையே வெடித்துவிடும் போல் இருக்கிறது.
அவன் இறைந்து கிடந்த சூழலும்
அறை முழுக்கப் பரவிக்கிடக்கும் நறுமணமும்
ஏதோவொரு அசம்பாவிதத்தை உணர்த்துகிறது
இன்னொரு முறை இறைந்து கிடந்தவனை
ஒழுங்கு படுத்திவிட்டு
அறையை ஆராய்ந்தேன்
குள்ளமாய்
முகத்தில் கரும்புள்ளிகள் படர்ந்த
கரும்பூனையொன்று வாசலை நோக்கிப் பயந்தோடியது.

23 ஏப்ரல், 2011

சுதந்திரமாய்ப் பறக்கும் பட்டம்


சிறகுகள் படபடக்க நிற்கும் இடத்திலிருந்து
கற்பனைக்கு எட்டாத உயரத்தில்
பறந்து கொண்டிருப்பாய்
உன் கைகளும் கால்களும்
அததன் போக்கில் தன்
கடமையைச் செய்து கொண்டிருக்கின்றன
வெகு யுகங்களாய்
யாரும் புரியாத சாதனையை
நீ நிகழ்த்திவிட்டதாய் உன்னை அறிந்தவர்கள்
புளகாங்கிதத்தோடு
புகழக்கேட்டிருப்பாய்
பாராட்டு மொழியில்
உன் உடல் முழுக்கவும்
உடலை இரும்பெனத் துளைக்கும்
பனிக்கட்டியாய்க் கெட்டித்துப் போயிருக்கும்
ஆனாலும், மறந்துவிடாதே
இந்த பூமியின் முளைக்குச்சியில்
மாயக் கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன
உனது கைகளும் கால்களும்
சிறகுகளோடு சேர்த்து.

18 ஏப்ரல், 2011

49 ஓ - வாக்களிக்க விருப்பம் இல்லை வசதியில் திருத்தம் தேவை!

வாக்காளர்கள் மத்தியில், "யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்கிற பிரிவு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது,'' என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார். தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, "49 ஓ' குறித்து தெரிவித்த கருத்து: சட்டசபை தேர்தலில், 78 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2006ம் ஆண்டு நடந்த தேர்தலை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொருவரும், ஓட்டளிப்பது ஜனநாயக கடமை என்பது வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில், யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்கிற, "49 ஓ' பிரிவு, குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு செய்தித்தாள், ஓட்டுச்சாவடி ஆகியவற்றில் "49 ஓ' பிரிவு குறித்து விளம்பரப்படுத்தப்பட்டது. தேர்தல் கமிஷனின், இந்த நடவடிக்கையால், தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் மத்தியில், "49 ஓ' பிரிவு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார்.

என்று நாளிதழ்களிலும் பிற இதழ்களிலும் செய்திகள் வெளியாகி பெருமையோடு மார்தட்டிக் கொள்கின்றன. இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் அதே சமயத்தில் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுக்க வேண்டிய நிர்பந்தமும் வாக்காளர்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. பல சிரமங்களுக்குப் பிறகுதான் 49 ஓ வசதியைப் பயன்படுத்த முடியும். எழுத்து மூலமாக எழுத வேண்டும்.... கையெழுத்திட வேண்டும்.... வாக்காளர் 49 ஓ-வைப் பயன்படுத்துகிறார் என்ற செய்தி வாக்களிக்கும் அறையில் (Booth) உள்ள அனைவருக்கும் தெரிய வருகிறது. ஆனால்,  வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது மட்டும் மறைமுகமாக வாக்களிக்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த 49 ஓவுக்கு மட்டும் என்ன அவலம்? செய்தி ஊர் முழுக்கத் தெரிய வருகிறது. தான் அளிக்கும் வாக்கு யாருக்கு அளிக்கப்பட்டது என்ற ரகசியத்தைக் காக்க வேண்டியதும் தேர்தல் ஆணையத்தின் கடமை. இந்த அவலத்தைப் போக்க வேண்டும். அதாவது 49 ஓ வசதி வாக்குப் பதிவு எந்திரத்திலேயே ஒரு வசதியாக இருக்க வேண்டும். தவிர்த்து அறையில் உள்ள பணியாளர்களால் உதவப்பட்டு 49 ஓ வசதியைப் பயன்படுத்துமாறு இருக்கும் இந்த நிலைமை அடுத்த தேர்தலில் அல்லது பிற மாநிலத் தேர்தலில் கட்டாயம் மாற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் நம் தலைவர்களின்! உண்மை நிலையை உணர முடியும். மக்களின் மன நிலையை அறிய முடியும்.

3 ஏப்ரல், 2011

எண்ணங்கள் குருதியைப் பாதிக்கும்?

நம் எண்ணங்கள் நமது குருதியை பாதிக்குமா? அதன் மூலம் உடல் நலத்தைப் பாதிக்குமா? திருவள்ளுவர் தனது திருக்குறளில் நல்லவர்கள் தண்டனையை அனுபவிப்பதும் தீயவர்கள் சுகபோகமாய் வாழ்வதும் கண்டு ஆச்சரியப்படுகிறார். தர்மம்தான் ஜெயிக்கும் என்ற கோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர் அவர். ஆனால், எக்காரணத்தால் தீயவர்கள் தண்டிக்கப்படாமல் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்பது தெரியாமல் வியக்கிறார்.

'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பது தமிழர்களிடையே வழங்கும் ஒரு முக்கியமான பழமொழி. இதன் தர்க்கமும் அப்படித்தான். தெய்வம் உண்டோ இல்லையோ.... கம்பர் வார்த்தையில் சொல்வதென்றால், 'இன்றே என்னின் இன்றேயாம்; ஆமென் றுரைக்கின் ஆமேயாம்!' காலகாலமாக விவாதிக்கப்பட்டு இன்று வரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிற இந்த விவாதத்திற்கு நாம் இங்கு வரவில்லை. மாறாக, கெட்ட எண்ணங்கள் எப்படிக் குருதியைப் பாதிக்கின்றன்? கெட்ட எண்ணம் கொண்டவன் எப்படிக் கெட்டழிவான் என்பது குறித்துதான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

அறிஞர் ஒருவர், நல்ல எண்ணம் உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கம். கெட்ட எண்ணம் ரத்தத்தை மாசுபடுத்தி உடலுக்குள் நோயினை உற்பத்தி செய்து கேடெண்ணம் கொண்டவனைச் சாகடித்துவிடும் என்று எழுதுகிறார்.

இந்த விடயத்தைப் பற்றிப் பேசுவதற்குப் போதுமான அறிவு எனக்கு இல்லைதான். ஆனால், அது எப்படிச் செயல்முறையாகிறது என்று எனக்குள்ளாகவே கேள்விகள் பலவற்றை எழுப்பி அதற்கான விடையையும் என்னால் அறிய முடிந்திருக்கிறது என்று நம்புகிறேன்.

இந்த விடயமானது உளவியல் சம்பந்தப்பட்டது. உளவியலில் Reflection-பிரதிபலிப்பு சம்பந்தப்பட்டது. நோய்கள் கிருமிகளால் வருகின்றனு என்னும்  கருத்து மருத்துவ ரீதியில் 100% உண்மையானதாகவே கருதப்படுகிறது. ஆனால், உளவியல் ரீதியாக இந்தக் கருத்தில் முழு உண்மை இருக்கவில்லை.

மக்கள் மத்தியில் நோயானது இன்னும் பல வழிகளில் வருகின்றன என்னும் கருத்தை முற்று முழுதாக நம்பி வருகின்றனர். உதாரணமாக, காய்ச்சலைக் குறிப்பிடலாம். காய்ச்சல் எதன் மூலமாக வருகின்றது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், பயந்துவிட்டதால் காய்ச்சல் வந்துவிட்டதாகச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  பில்லி சூன்யத்தின் மூலமாகப் பித்து பிடித்தல் முதலான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக மக்கள் நம்புவது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இவைகள் எல்லாம் எப்படிச் சாத்தியமாகும்?

இதுகூட முற்று முழுக்க உளவியல் ரீதியாகவே நிகழ்ந்தேறுகின்றன. ஒருவர் ஒரு சிறிய பொய் ஒன்றைச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அது பொய் என்று மற்றவர்கள் உணராதவாறு, உண்மைதான் என்று நம்பும்படியாகச் சொல்வார்கள்; அவர்களும் 100% உண்மைதான் என்று நம்பலாம். ஆனால், அது பொய் என்ற விடயம் சொல்பவருக்குத் தெரியாமல் போய்விடுமா என்ன? எவ்வளவு பெரிய கல் நெஞ்சம் கொண்டவராக இருந்தாலும் அவருக்கும் மனது என்பது உண்டுதானே? மனசாட்சி என்பது கண்ணிமை அளவாவது இருக்கும்தானே? அதுவே போதும் அவரைத் தண்டிப்பதற்கு.

ஆக, எண்ணங்கள் அவர் சிந்தனையைத் தூண்டுகின்றன. நல்லெண்ணமாக இருந்தால் மகிழ்ச்சியையும் கெட்ட எண்ணமாக இருந்தால் அவர் நலத்திற்கு எதிரான நிலையையும் ஏற்படுத்துகிறது. உள்ளிருக்கும் எண்ணங்கள் அவரது செயலை நிர்ணயிக்கின்றன. அவரது செயல் பிறரது மனதையோ அல்லது பிறவற்றையோ பாதிப்படையச் செய்கிறது. அந்தப் பாதிப்பின் மூலமாக எதிராளியின் செயற்பாடுகள் இவரை வந்தடைகிறது. நற்செயலாக இருந்தால் நற்பலனையும் தீய எண்ணமாக இருந்தால் எதிர்நிலைப் பலனையும் அடைய நேர்கிறது. இப்பொழுது சொல்லுங்கள்..... இது Reflection Theory மூலும் இயங்கக்கூடிய நியாயத் தீர்ப்புதானே?

எனவே, கெட்ட எண்ணம் கொண்டவர்கள் யாராலும் தண்டிக்கப்படாமலேயே தானே கெட்டழிவர். தூய எண்ணம் கொண்டவர்கள் மாசடையாத குருதியோடும் பாதிப்படையாத உடல் நலத்தோடும் வளமாகவே பல காலம் வாழ்வர். இந்த நியாயத் தீர்ப்பில் சிறிது கால இடைவெளியில் வேண்டுமானால் மேற்படி தர்க்கப்படி செயல்படாமல் போகலாம். ஆனால், இறுதியில் 'தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும்' என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுப்படியே முடியும்.

2 ஏப்ரல், 2011

இந்தியா-இலங்கை உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா வெற்றி!

ஒரு ரன் கூட எடுக்காத நிலையிலேயே மட்டையைக் கையில் பிடித்த உடனேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு ஆளான நம் துக்கத்தை எதைச் சொல்லி ஆற்றுவது? தொலைக்காட்சிப் பெட்டியை உடைக்கலாமா என்றுகூட வார்த்தைகளில் வெளியிட முடியாத கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.  உடனடியாக எனது நண்பனுக்கு அழைத்தேன். இது முன்பே முடிவு செய்துவிட்ட ஆட்டம் என்றான். அவனுடைய கூற்றுக்குக் கல்லூரி பேராசிரியரையும்-அவரது வாக்கையும் சாட்சிக்கு அழைத்தான். ஒருவழியாக இறுதியில் இந்தியா வென்று காட்டியது. முன்பே தீர்மானிக்கப்பட்ட ஆட்டம் அல்ல என்பது இறுதியில் இந்திய வீரர்கள் உலகறியச் செய்தார்கள்.

ஆனால், இரண்டு முறை டாஸ் என்ற தடுமாற்றத்துடனே துவங்கிய ஆட்டத்தில்கடைசிவரை ஒரே மாதிரியே பந்துகளுக்கும் எடுக்க வேண்டிய ரன்களுக்குமான எண்ணிக்கை இருந்தது இது முன்கூட்டியே தீர்மானம் செய்து ஆடப்படுகிற ஆட்டமோ என்ற சந்தேகம் வந்ததை தவிர்க்க முடியவில்லை.

இலங்கைப் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் டென்ஷனானது தெரிந்தது. தோட்டக்காரனுக்குத் தெரியாமல் திருட்டு மாங்காய் அடிக்க, கல்லை வீசுவது போன்றே பாட்ஸ்மேன்களின் கால்களைக் குறி வைத்துப் பந்தை 'எறிந்தார்கள்' வீசுவதற்கு பதிலாக.ஆனால் பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அளவுக்கு அழுகுணி ஆட்டம் ஆடாமல் தோற்கப் போகிறோம் என்பதைப் புன்னகையுடனேயே இலங்கை அணியின் கேப்டன் ஏற்றுக் கொண்டது ஒரு கவிதை.

கடைசி ஓவரைத் தான்தான் அடித்து முடிக்க வேண்டுமென்ற தோணியின் பிடிவாதத்தைத் தளர்த்தியிருக்கலாம்.

முன்பே சுலபமாக அடித்து முடிக்க வேண்டிய ஆட்டத்தை மெதுவாக நகரும் மிஷ்கினின் மர்மப்படம் போல மந்த கதியில் கொண்டு சென்று கடைசியில் காத்திருந்த மகாஜனங்களுக்கு போனால் போகிறதென்று ஒரு சிக்ஸரைத் தந்த தோனிக்கும் அரைமில்லிமீட்டர் அளவூக்கு ஒரு சின்ன சிரிப்பைத் தந்து விடுவோம்.

இருபத்தெட்டு வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றியிருக்கிறது. இந்தியன் என்பதில் அளவுகடந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் ஏற்படுகிறது. இந்திய வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லிவிடுவோமே.... இந்த நள்ளிரவிலும் பட்டாசு சப்தங்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. நாமும் கொஞ்ச நேரம் வெடித்துவிட்டு இப்பொழுது உறங்குவோம். நாளை கொண்டாடுவோம்.

26 மார்ச், 2011

ஒளி வழியும் திரியின் நுனியில்

ஒத்திசைந்தேகும்
இருவரினதுமானதோர் செய்கையில்
இரு முனைக்கும் செல்ல மறுத்த
நியாயத்தால்
வேசியன் என்று விமர்சிக்கப்படுகிறேன்

எனக்குப் பிடித்தமான
குழவியொன்றின் பாஷையாக இல்லாமல்
அதெனக்குக்
காது குடையும் கடப்பாரையாகிறது

பொய்களால் நிரம்பிய
பேச்சைப் பருகியதன் மயக்கத்தில்
சுயபிரக்ஞை ஏதுமற்று
என்னால் வெட்டி வீழ்த்தப்பட்ட
உண்மையின் சாபம்தான் இது

எனக்குப் புரிய வெகுநாளானது
புணர்ப்பில் பிறக்கும் சிறுமுனகலில்
கிட்டும் வலியூறிய மகிழ்ச்சி
எல்லா தருணத்திலும் கிட்டுவதேயில்லை

ஒளி வழியும் திரியின் நுனியில்
வாழ்க்கை சடசடக்கிறது.

16 மார்ச், 2011

வெங்காயம்

ன்றாகப் பழகியதொரு பாதை
எனைக் கடந்துகொண்டிருக்கும் பொழுது
திருப்புமுனை ஒன்றில் உனைச் சந்தித்தேன்
அதுவரை
கனவுகளால் செப்பமிடப்பட்ட அந்தப் பாதை முழுக்கவும்
நானே நிரம்பியிருப்பதாய் உணர்ந்திருந்தேன்
இலவு காத்த கிளி போல அல்லாமல்
பறந்து போன பஞ்சாகியது
சூழல் புதிதானது
நீயும் புதிதானாய்
பிறிதொரு நாள்
உன்னுள் நானும் என்னுள் நீயுமாய்
உறைந்து கிடக்கிற பொழுது
நன்றியுள்ள ஜீவனுக்குச் சிறுவயதில்
நான் வீசிய கல் போல
எனக்கே திரும்பியது
உன் மறுமுனையில் நான் என்றானபிறகு
நமக்கிடையில் யாரோ
நடந்துபோய்க் கொண்டிருக்கிறார்கள்
இந்த முறை
இலவு காத்த கிளியோ
விலை கூறப் போகிற வெங்காயமோ?

ஐகாரக் குறுக்கம்



யாப்பிலக்கணத்தில் எழுத்து வெறும் மூன்று வகை மட்டுமே என்பது இலக்கண வல்லுநர்களான உங்களில் பெரும்பாலானவருக்குத் தெரிந்திருக்கும். அடியேனுக்கு ஒரு சிறிய ஐயம் உண்டு. அதைப்பற்றித்தான் இந்த இடத்தில் தெரிந்துகொள்ள முடியுமா என்று முயற்சி செய்கிறேன்.

யாப்பு இலக்கணத்தில் மூன்றே எழுத்துக்கள் என்பது குறில், நெடில், ஒற்று என்பது மட்டுமே. அப்படியானால் குறுக்கங்கள் என்று நாம் படிக்கும் இலக்கணம் யாப்பு இலக்கணத்தில் பயன்படுத்த முடியாதா? இந்த விடயத்தில் திருவள்ளுவரும் தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். நான் பார்த்த அளவுக்கு இந்தப் பிரச்சனைக்கு அவர் இடமே தரவில்லை. குறிலாக எடுத்துக்கொண்டாலும் சரி.... நெடிலாக எடுத்துக் கொண்டாலும் சரி.... தளை தட்டுவதே இல்லை அவரது குறளில்.

ஆனால் நந்திக் கலம்பகத்தில் ஒரு வெண்பாவில்,

ஈட்டுபுகழ் நந்தி பாணநீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடியளவும் காட்டிலழும்
பெயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீயென்றேன் நான்.

என்னும் வெண்பாவில் எங்கையர்தம் என்னும் சீரைக் கவனித்தால் அதில் வரும் ஐகாரமானது ஐகாரக் குறுக்கமாகத்தான் இருக்கிறது. நந்திக் கலம்பக ஆசிரியரும் குறுக்கம் (வெண்பாவிலும் வரலாம்; அது நெடில் அல்ல. மாறாக, அது யாப்பில் குறிலாகவே கொள்ளப்படும்.) என்பதை மனதில் கொண்டுதான் அந்த வெண்பாவை இயற்றியிருக்கிறார். நெடிலாகக் கொண்டால் தளை தட்டும்; இலக்கணப் பிழை ஏற்படும்.

எனவே, வல்லுநர்களாகிய நீங்கள் ஐகாரக் குறுக்கம் நெடிலல்ல; அது குறில்தான்; வெண்பாவில் ஐகாரக் குறுக்கத்தைக் குறிலாகவே வெண்பாவில் பயன்படுத்தலாமா என்பதை எனக்கு விளக்குங்கள்.