வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

20 ஜூலை, 2015

மயான அமைதி!

அப்படி இப்படி ஆடாமல் - வேம்பு
இருக்கிற படியே இருக்கிறது
சொப்பண மாகிலும் காண்பதற்குக் - காற்று
சுதந்திரத் துடனே வாராதோ?
கப்பலா கவிழ்ந்திடப் போகிறது - பின்பு
காரணம் எதுவோ அமைதிக்கு?
எப்பழி தோன்றினும் தோன்றட்டும் - வாயு
இறைவனைத் தடியால் கொல்லுகிறேன்.

உகப்பாய் எனக்குள் உமா!

அட்டியில் இட்டுதான் ஆவி பறந்திட
சுட்டே எரித்தாலும் சொர்ணத்தை - விட்டு
அகன்று விடுமோ அதன்பள பளப்பு
உகப்பாய் எனக்குள் உமா.

25 ஜனவரி, 2015

ஓரானை முகத்தான்

ஓரானை முகத்தானை உள்நெஞ்சில் நினைப்பானை
தீராத தீவினைகள் தீண்டாமல் அறுப்பானை
பாராளுஞ் சிறப்பானை பார்வதியின் புதலோனை
மாறாத குணத்தோடு மனமேநீ நினை!

- பெ.சக்திவேல்

18 ஜூலை, 2012

முன்பொரு காலத்தில்......

இந்த யுகத்தைக் கலியுகம் என்று கூறுவதைப் போல அன்று அதனை ஆதி யுகம் என்று அழைத்தார்கள். ஆதிக் குடிகள் ஆடையற்று வாழ்ந்த அந்தக் காலத்தில் இவனும் அப்படித்தான் வாழ்ந்தான். ஆனால், பன்னூறு மக்களைப் போல இவனை ஒப்பிட முடியவில்லை. இவன் பார்வை பல கோடி ஆண்டுகளை எட்டிப் பார்த்தது. அது எப்படிப் பார்க்க முடியும் என்று நமது சிற்றறிவைக் கொண்டு கேள்வி கேட்டால் உடனே விடை கிடைக்காது. மகாபாரதப் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது தனது ஞான திருஷ்டியின் மூலமாக யுத்த களத்தில் நடக்கும் சம்பவங்களை அரண்மனையில் இருந்தவாறே திருதராட்டினனுக்கு Live Broadcasting செய்து கொண்டிருந்தானே சஞ்சயன்! அது எப்படி முடியும் என்று யாராவது கேள்வி கேட்டோமா? ஆனால், சஞ்சயனால் முடிந்தது.

“காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்றான் பாரதி. அவன் இப்படி எழுதிய போது பலர் அவனைக் கிருக்கன் என்றே பார்த்திருப்பார்கள். ஆனால், இப்பொழுது என்ன ஆயிற்று? இந்த உலகத்தின் எந்தக் கோடியில் எந்த மூலையில் இருந்தாலும் Video Calling மூலமாக Net Chatting மூலமாக பாரதி சொன்னதைக் காட்டிலும் பல மடங்கு முன்னேற்றம் இல்லையா?

அநேகன் தன்னை ஓர் தீர்க்கதரிசியாகவே எண்ணிக் கொண்டான். ஆனால், மற்றவர்கள் பார்வையில் அவன் சித்த பிரமை பிடித்துக்கொண்டு அலையும் பைத்தியக்காரனாகவே பட்டான். பல கோடி வருடங்களுக்குப் பின்னால் திருவள்ளுவன் என்ற ஒரு புலவன் இங்குத் தோன்றுவான். அவன் வெண்பா என்னும் யாப்பில்தான் எழுதுவான் என்பதை முன்கூட்டியே கணித்தான் அநேகன். அதனால் அந்தத் தொனியில் இவனும் சில பாடல்கள் எழுதினான். அதில் ஒன்றுதான் இது:

வாழவும் வாழ்வாரை வீழவும் செய்திடும்
அண்டம் அனைத்தும் அணு.

அணுவைப் பற்றிக் கபிலரும் பாடியிருக்கிறார். அவ்வையாரும் பாடியிருக்கிறார். இவர்களும் பாடுவார்கள் என்று முன்பே தெரிந்து கொண்ட ஒரே காரணத்துக்காக அநேகனும் மேற்கண்ட பாடலைப் பாடி வைத்தான். ஆனால், ‘தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்’ என்று கடவுளைப் பாடிக் கொண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் தூணிலும் துரும்பிலும் அல்லாமல் அண்டம் முழுக்கவும் நிறைந்திருப்பது அணு மட்டுமே என்றால் அவனைக் கும்பிடவா செய்வார்கள்? ஏற்கனவே இருந்த பைத்தியக்காரன் என்ற பட்டத்தைத் தாண்டி தேசத்துரோகி, மதத்துரோகி என்ற பட்டத்தைக் கட்டி அவனை அந்த யுகத்திலிருந்தே வேறு யுகத்திற்கு வழியனுப்பப் பார்த்தார்கள். தீர்க்கதரிசியான அநேகனுக்கு இதுவும் தெரியாமல் இல்லை. அப்படி அந்த அறிவு ஜீவிகள் அழிக்க வரும்போதுதான் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செய்தியை அறிவித்தான். கொஞ்சம் துணுக்குற்ற அறிவாளிகள் சற்று பொறுத்தனர். ‘எல்லாம் முடியும் அணுவால்’ என்ற தத்துவத்தை அவன் அப்பொழுதுதான் முன் வைத்தான். ஆனால், ஏற்கனவே அவன் பேசிய பைத்தியக்காரத் தனமான சொற்களுள் இதுவும் ஒன்று என்ற முடிவுக்கு அவர்கள் வருவதற்கு அதிக நேரத்தையோ சிரமத்தையோ எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் சற்று யோசித்தார்கள். அதன் விளைவாக உயிரை எடுக்கும் முடிவு சற்று தள்ளி வைக்கப்பட்டது. இப்பொழுதைக்குச் சிறைசெய்து வைக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவுக்கு அவர்கள் வந்ததற்கான காரணம் அநேகனின் பைத்தியக்காரத் தனமான பேச்சுக்கள் மக்கள் மத்தியில் பரவிவிடக் கூடாது என்பதற்காக மட்டும்தான்.

ஆனால், அந்த அறிவு ஜீவன்களில் ஒரு ஜீவனுக்கு மட்டும் அநேகனைக் கொல்லவோ அல்லது சிறைபிடிக்கவோ துளியும் விருப்பம் இல்லை. அநேகனின் வார்த்தைகள் அந்த ஜீவனின் உள்ளத்தில் என்னமோ செய்து கொண்டிருந்தன.

‘அனன்யா! என் வார்த்தைகளை இந்த உலகம் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறது? ஏன் என் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? நான் உண்மையிலேயே பைத்தியக்காரன்தானா? இவர்களுக்கு துரோகம் செய்ய நினைக்கிறேனா? சொல் அனன்யா… இவர்களை நான் அழிக்க நினைக்கிறேனா? ஈ, எறும்புக்குக் கூட ஊறு செய்ய நினைக்காத என்னை இவர்கள் தேசத்துரோகி என்கிறார்கள்… மதத்துரோகி என்கிறார்கள். நீயாவது சொல் அனன்யா.’

சிறைக் கம்பிகளுக்குள் இருந்துகொண்டு தன்னிடம் அநேகன் முறையிடுவது போன்றே சதா சர்வ காலமும் அனன்யா நினைத்துக் கொண்டே இருந்தாள். மலர்கள் மலர்வது போன்றோ அல்லது பொழுது விடிவது போன்றோ அவளுக்குள் பலப்பல உணர்வுகளைத் தூண்டிவிட்டன அநேகனைப் பற்றிய நினைவுகள். அநேகன் அழிவில்லாதவன். அவனால் இந்த உலகுக்கு எவ்வளவோ பெரிய நன்மைகள் காத்துக் கிடக்கின்றன என்ற சிந்தனை மட்டும் அவளை ஆட்கொண்டது. அதனால் அநேகனைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று நினைத்தாள். ஆமாம்… நான் யார் அவரைக் காப்பாற்ற? அவர் நினைத்தால் அந்த இரும்புக் கம்பிகள் எம்மாத்திரம்? இல்லையென்றால் அந்த இரும்புக் கம்பிகள் அவரை என்னதான் செய்துவிட முடியும்? ஆனால், சில யோசனைகளை அநேகனிடம் முன்வைக்க விரும்பினாள் அனன்யா.
இருண்டு கிடக்கும் அந்த மக்களிடம் ஒளியைப் பாய்ச்சிவிட விரும்பினாள். ஆனால், அப்படி நினைத்ததால்தானே அநேகனும் சிறைக் கம்பிகளுக்குள் கிடக்கிறான். அந்த நினைப்பு வந்ததுமே இவளுக்கும் லேசாக அச்சம் வர ஆரம்பித்தது. ஆனாலும் துணிந்தாள்.

இரவோடு இரவாக அநேகனைத் தேடி ஓடினாள். அவனை வெளியே எடுக்கும் உபாயங்களை மூச்சிரைக்கும்படித் தொடர்ந்து கூறினாள். ஆனால், இத்தனை மணிநேரப் பேச்சை அவன் செவிமடுத்தானா என்பது தெரியவில்லை. அவனது சிந்தனை வேறு எங்கோ இருந்தது. திடீரென அலறினான்.

‘என்னைக் காப்பாற்றுங்கள்…. என்னைக் காப்பாற்றுங்கள்…’

அனன்யா ஒரு கணம் திகைத்து நின்றாள். அநேகன் பேராபத்திலிருந்து விடுபட்டவன் போல மீண்டான். எதிரே யாரோ நிற்பதைப் பார்த்த அவன் ‘என் மக்கள் அழியப் போகிறார்கள். கடல் பொங்கி வருகிறது’ என்று திரும்பத் திரும்பக் கத்தினான். ஆனால், இந்தப் பேச்சை அனன்யாவாலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், தான் வந்த காரியத்தைச் செயல்படுத்த முனைந்தாள். ‘எல்லாம் முடியும் அணுவால்’ என்று கூறினீர்களே…. அணு உங்களைக் காப்பாற்றாதா? நிச்சயம் காப்பாற்றும். இருண்டு கிடக்கும் எங்கள் வீடுகளில் ஒளியேற்றுங்கள். உங்களுக்கும் விடுதலை கிடைக்கும்’ என்றாள். ‘உங்களுக்குத் தேவை இந்த ஒளிதானே? மக்கள் இல்லையே? உடனே ஏற்பாடு செய்கிறேன்’ என்று கூறினானே தவிர அவன் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை. முதலில் இந்த மக்களைக் காப்பாற்றியாக வேண்டும். அதனூடாக இவர்களுக்கு ஒளி கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். ‘எனக்குப் பதிலாய் என் உருவத்தில் நீ இந்தச் சிறைக்குள் இரு. நீ அப்படி இருந்தால் என் பணி தடைப்படாமல் இருக்கும்.’ அனன்யா இதற்கு ஒப்புக் கொண்டாள். இது தனக்குக் கிடைக்கும் யுகங்கள் பல கடந்த வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டான் அநேகன். ஒற்றைக் கல்லில் இரட்டை மாங்காய் அடிக்க முனைந்தான்.

ஒரு புறம் கடல் சூழ்ந்து வரும் பேராபத்தைத் தடுத்தாக வேண்டும். மறுபுறம் இவர்கள் இல்லங்களில் / உள்ளங்களில் ஒளி பெறச் செய்ய வேண்டும். அதற்கும் அணுவையே பயன்படுத்த எண்ணினான். வாழ்வதும் வீழ்வதும் அணுவால் மட்டுமே என்பதால் அணு ஆற்றலையே அவன் பயன்படுத்தத் துணிந்தான். வான் முட்டும் ஒரு திரையொன்றைக் கடலுக்கு வேலியாக்கினான். குன்றம் ஏந்திக் காத்தவன் போல அந்த யுகத்து மக்களை ஒருவர் விடாமல் காப்பாற்றினான். உபரி ஆற்றலில் வீடுகளுக்கெல்லாம் பகல் போலவே ஒளியைப் பாய்ச்சினான். அறிவாளிகளின் இல்லங்களிலும் அவ்வொளி பாய்ந்தது.

அது வரை இருந்த பைத்தியம் இப்போது கடவுளானான். அனன்யா அவனின் பிச்சியானாள். ஆதியுகத்தை அப்படியே கலியுகமாக்கினான் அநேகன். ஆனால், யார் இப்போது கடவுளாகப் போகிறார்கள்?