இந்தியத் திருநாடு
வள்ளுவர் காலத்திருந்த மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களை மக்களே ஆளும் மக்களாட்சி
முறை (அ) குடியாட்சி முறை சென்ற நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. ‘மாற்றம் என்பது மானுடத் தத்துவம்’ என்பார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.
எல்லாக் காலத்துக்கும் நிலைபெற்ற உண்மைகள்/நீதிகள் என்று ஒன்றுமே இல்லை. உண்மைகளும்
நீதிகளும் காலத்துக்குக் காலம் இனத்துக்கு இனம் மொழிக்கு மொழி மாநிலத்துக்கு மாநிலம்
நாட்டுக்கு நாடு மாறும் தன்மை கொண்டன. அதாவது, மாற்றம் என்பதே மாற்றம் இல்லாதது. இதில்
உலகப் பொதுமறை, பொய்யாமொழி என்று நாம் வாயாறப் புகழ்ந்து மார்தட்டிக் கொண்டிருக்கும்
திருக்குறள் மட்டும் விதிவிலக்கல்ல. ஒரு படைப்பாளன் தான் வாழும் காலத்தைத்தான் பிரதிபலிக்கிறானே
ஒழிய நிலைபெற்ற உண்மையை அல்ல.
தமிழ்ச் சமூகத்தில்
ஆகச்சிறந்த இலக்கியங்களில் தலையாயது திருக்குறள். தமிழ் மறை என்று மிக மிக உன்னத நிலையில்
வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது குற்றம் சுமத்துவதா? என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழலாம்.
உன்னதமான ஒரு
கலைஞனை – அற்புதமானதொரு படைப்பாளனை, தமிழனை உலகப்பரப்பில் தலை நிமிரச் செய்ததில் மிகப்பெரும்
பங்காற்றியிருக்கும் ஒரு புனிதனைக் கறைபடுத்தலாமோ என்கின்ற வாசிப்பாளராகிய உங்களுடைய
தார்மீகக் கோபம் கட்டுரையாளருக்குப் புரியாமல் இல்லை. உங்களுடைய அளவு கடந்த கோபத்திற்கு
கட்டுரையாளரின் சிரம்தாழ்ந்த நன்றிகளும் வரவேற்புகளும் உரித்து. நிற்க.
தலைமுறை இடைவளியை
இட்டு நிரப்பும் மாயத்தகுதி எந்த ஒரு படைப்புக்கும் பூரணமாக அமையும் சாத்தியப்பாடுகள்
இல்லை. ஆனால், ‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் இவ்வையகமே’, ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே
தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’, ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப்போல்
இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை’ என்னும் கருத்துக்களோடு கட்டுரையாளருக்கும்
மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதே சமயம், ஒரு மகன் தன் தந்தையின் தோளில் அமர்ந்து
இந்த உலகத்தைக் காண்கிறான் என்பதையும் நினைவில் வைத்து நோக்க வேண்டும். அப்பனுக்குப்
பாடம் சொன்ன சுப்பனும் குருவை மிஞ்சிய சீடனும் தமிழ்ப்பரப்பில் இல்லையா என்ன? அதற்காகக்
கட்டுரையாளர் குருவை மிஞ்சிய சீடரா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். திருவள்ளுவரோடு
ஒப்பிடும்போது அவர் முன்னால் நிற்கக் கூட யோசிக்க வேண்டிய நிலையில்தான் கட்டுரையாளர்
இன்னும் இருக்கிறார். ஆனால், வெண்ணிலவில் களங்கம் இல்லையா என்ன? அப்பேர்பட்ட ஐந்தெழுத்து
மந்திரத்துக்குச் சொந்தக்காரரான சிவபெருமானே தவறு செய்யவில்லையா என்ன? உங்களுக்குக்
கோபப்படுவதற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதற்கு நிகரான உரிமை கட்டுரையாளருக்கும்
கட்டாயம் உண்டு. கட்டுரையாளர் தனது தாத்தனை விமர்சிப்பதில் என்ன தவறு? வரலாறுகள் கட்டாயம்
கீழிருந்தும் நோக்கப்பட வேண்டும்.
![]() |
திருவள்ளுவர் |
கற்பு
‘கற்பென்று சொல்ல வந்தார் – இரு
கட்சிக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்’
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதி.
‘கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை’
என்றார் அவ்வையார்.
இருவருமே ஆண், பெண் என்ற இரு இனத்தவருக்குமே சமமான நீதியைப் போதிக்கின்றனர். கற்பு
என்பது பெண்ணுக்கானது மட்டுமல்ல. மாறாக, இருவருக்குமானதுதான் என்பது பாரதியின் வாதம்.
ஆனால், அவ்வையார் கற்பு என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் கருத்தையே விடுத்து கற்பு
என்பதற்குப் புதிதான பொருளையே தருகிறார். கற்பு என்பது வாக்கு தவறாமை; சொன்ன சொல்லை
மாற்றிப் பேசாமை என்று விளக்கம் கொடுக்கிறார்.
ஆனால், வள்ளுவர்
மட்டும்தான் கற்பு என்பது பெண்களுக்கானது மட்டும்தான். கற்புடைய பெண்கள் கடவுளுக்கு
நிகரானவர்கள் என்று பெண்களை உயர்த்துவதாகக் கூறி மறைமுகமாகத் தனக்கு அடிமைக்கிக் கொள்ளும்
ஆணிய மனோபாவம் திருவள்ளுவர் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.
பெண்ணிற் பெருந்தக்க
யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப்
பெறின்.
கடவுள் தொழாள்
கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும்
மழை.
இதில் திருவள்ளுவரைச்
சொல்லிக் குறையில்லை. கலைஞன்/கவிஞன் காலத்தின் கண்ணாடியாவான். திருவள்ளுவர் தனது காலத்தைப்
பிரதிபலிக்கிறார். என்பதுதான் நிதர்சனம். கட்டுரையாளரின் கருத்துக்கு வளம் சேர்க்கும்
இன்னொரு எடுத்துக்காட்டு சிலப்பதிகாரம். முலைமுகம் திருகி முக்கூடலை எரித்தாளாம் கண்ணகி.
அவள் மார்பகம் என்ன பாஸ்பரஸ் கட்டியா? இதே போன்று திருவள்ளுவர் மனைவியாகக் கருதப்படும்
வாசுகி குறித்த கதைகள் தமிழில் ஏராளம். அனைத்துக் கதைகளும் ஒட்டுமொத்தமாகக் கட்டுக்கதைகள்
என்று புறந்தள்ளிவிடவும் முடியாது. ஆனால், கற்புத்தன்மையை உயர்த்திச் சொல்வதற்காக,
பெண் இனத்தை எப்பொழுதும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொள்வதற்காக ஆணினத்தால் கையாளப்பட்ட
மாபெரும் யுத்தி. இதே தன்மை கொண்ட கற்பை ஏன் ஆண் இனத்திற்கும் விதித்திருக்கக் கூடாது?
கம்பர் இராமனுக்கு விதிக்கவில்லையா என்ன? அப்படி ஒரு ஆண் மகன் இருக்கின்றானா என்பது
கேள்விக் குறியாக இருந்தாலும் அப்படிப்பட்ட ஓர் சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்ற
கற்பனைச் சமுதாயம் கம்பருக்குத் தோன்றியிருக்கிறதல்லவா? கவிச்சக்கரவர்த்தி கம்பர் மீது
இருக்கும் விமர்சனம் என்பது வேறு. அவர் கற்புத்தன்மையைச் சீதாபிராட்டிக்கு வற்புறுத்திய
அளவுக்கு இராமபிரானுக்கு வற்புறுத்தினாரா என்பது ஐயப்பாடுதான்.
கண்ணகியின் கற்பை
விதந்துரைக்கும் பலரும் கோவலனின் கற்புத்தன்மையைக் கேள்வி கேட்பதில்லை. பஞ்சவர் தேவி
பாஞ்சாலியை ஆராயும் பலரும் அருச்சுனனின் ஆண்மை குறித்துத்தான் புளகாங்கிதம் அடைகிறார்கள்.
இதே மனநிலைகளில்தான் திருவள்ளுவரும் இயங்கியிருக்கிறார்.
ஒரு படைப்பாளன்
காலத்தைப் பிரதிபலிப்பவன் மட்டும் அல்லன். காலத்தையே உருவாக்கும் தகுதிப்பாடும் கொண்டவன்.
தன்னால் காலத்தைப் படைக்க முடியாமல் போனாலும் கம்பன் முயற்சித்த மாதிரி திருவள்ளுவர்
முயற்சித்திருக்கலாம். இப்படி விவாதிக்கும்பொழுது கம்பர் பெரியவரா வள்ளுவர் பெரியவரா
என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். கட்டுரையாளரின் நோக்கம் இங்கு என்னவென்றால் திருவள்ளுவர்
ஒருதலைச்சார்பாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதை நிரூபணம் செய்வது மட்டுமே.
கல்வி
‘எண்ணும் எழுத்தும்
கண்ணெனத் தகும்’ என்று கூறும் வள்ளுவர் கருத்தோடு யாரும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்க
முடியாது. கற்றவருக்கு இருப்பதுதான் கண். கல்லாதவருக்கு இருப்பது புண்ணாகும் என்பதைக்
கூட ஏற்றுக்கொள்வார்கள். இங்கே ஒரு கேள்வி. திருவள்ளுவரின் காலத்துக்கு முன்பும் திருவள்ளுவரின்
காலத்திலும் எத்தகைய சமூகம் தமிழ்ச் சூழலில் நிலவியது? கல்வி பெறும் உரிமை யார் யாருக்கு
வரையறுக்கப்பட்டது? எத்தனைச் சதவிகித மக்கள் கல்வி கற்றார்கள்?
நூல்களின் மூலமாகக்
கற்றறிவது கல்வி. ஆசிரியர்கள் மூலமாகக் கேட்டு அறிந்து கொள்வது கேள்வி. கல்வியும் கேள்வியும்
இரண்டுமே அறிவு எனும் புள்ளியில்தான் சங்கமிக்கின்றன. அதனால்தான் அறிவுடைமை அதிகாரம்
இந்த இரண்டு அதிகாரங்களுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ளது. கல்விக்கும் கேள்விக்கும்
இடையில் இருக்கும் கல்லாமை எனும் அதிகாரத்தில் நிறைய கேள்விகள் அநீதையைப் போதிப்பதாகவே
உள்ளன. குல/பொருளாதாரக் காரணங்களால் ஒருவன் படிக்க முடியாமல் போனாலும் பட்டறிவில் ஏட்டுப்
படிப்பாளியைக் கட்டிலும் சிறந்த அறிவு பெற்றிருக்கும் ஒருவன் மற்றவரால் போற்றப்படமாட்டான்.
கல்லாதான் ஒட்பங்
கழிய நன்றாயினும்
கல்லார் அறிவுடை
யார்.(404)
பல்வேறு இயலாமைகளால்
படிக்கும் வாய்ப்பிழந்த ஒருவன் தானே முயன்று அறிவாளியாகின்றான். அவனை ஏன் அறிவாளியாக
ஏற்றுக் கொள்ளக் கூடாது? இந்த இடத்தில்தான் சிக்கலானதும் அநீதியானதுமான முடிச்சு போடப்பட்டிருக்கிறது.
கட்டுரையாளரின் கேள்வி என்னவென்றால் பட்டறிவால் அறிவாளியான ஒருவனை ஏன் நாம் அறிவாளியாக
ஏற்றுக் கொள்ளக் கூடாது? எளிதில் கிடைக்கும் வாய்ப்புகளால் அறிவாளியான ஒருவனைக் காட்டிலும்
அரிதின் முயன்று பெரும்பாடு பட்டு அறிவைப் பெறும் ஒருவனைத்தானே பாராட்டி வரவேற்க வேண்டும்?
அதைவிடுத்து அவனைப் புறமொதுக்குதல் என்ன விதமான அரசியல்? திருவள்ளுவர் இந்த இடத்தில்
வெகுசன மனோபாவத்தை விலைகொடுத்து வாங்கியிருக்கிறார். அதாவது அநீதிக்குப் பாடுபட்டிருக்கிறார். இந்த இடத்தில்
துரோணாச்சாரியார் தன் மாணவன்(!) ஏகலைவனுக்கு இழைத்த கொடூரமான பாவம்தான் நினைவுக்கு
வருகிறது. பாவம் இழைத்த துரோணாச்சாரியாரும் திருவள்ளுவரும் வேறல்லர். ‘கற்கை நன்றே!
கற்கை நன்றே! பிச்சை புகினும் கற்கை நன்றே!’ என்னும் வாக்குப்படி கர்ணன் பரசுராமரிடம் ஒரே ஒரு பொய்யைச் சொல்லி பாடம் கற்றுக்
கொள்கிறான். உண்மை வெளியான பிறகு பரசுராமர் செயல்பட்ட அதே தன்மையில்தான் திருவள்ளுவரும்
இங்குச் செயல்படுகிறார். அநீதியை அரங்கேற்றிய பரசுராமரும் திருவள்ளுவரும் வேறல்லர்.
இதையும் தாண்டி
மாபாதகச் செயலைத் திருவள்ளுவர் செய்யத் துணிகிறார். கல்வியறிவில்லா அப்பாவி மக்களைத்
தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுவது போன்று இருக்கிறது அவரது வாக்கு.
செவியின் சுவையுணரா
வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும்
என்.(420)
கேள்வியறிவு இல்லாத
மக்களை இந்த உலகத்தில் வாழ்வதே வீண்; இருந்தாலும் ஒழிந்தாலும் ஒரே தன்மையதே என்று அறிவுறுத்துகிறார்.
இந்திய தேசத்தில் எத்தனை பேருக்குக் கேள்வி அறிவு வாய்த்திருக்கிறது? அறிவு பெறும்
உரிமை எத்தனை பேருக்கு இருந்திருக்கிறது? திருவள்ளுவர் காலத்திலும் சரி. தற்காலத்திலும்
சரி. கேள்வி அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை சதவிகிதம்? அவர் காலத்தில் குறைந்த
பட்சம் 10 சதவிகிதம் கூட இருந்திருக்க முடியாது. மீதி இருக்கும் 90 விழுக்காட்டினர்
இந்த உலகத்தில் வாழவே கூடாதா? கல்வி அறிவு பெற முடியாத சமூகத்தில் இந்த மக்கள் உயிர்
வாழத் தகுதி அற்றவர்களா? அப்படி என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்? சமூகக் கட்டுப்பாடுகளை
மீறி அறிவு பெற்றாலும் சூழ்ச்சியால் பழி வாங்கப்படுவார்கள். ஏகலைவனும் கர்ணனும் இப்படித்தானே
பழிவாங்கப்பட்டார்கள்? இதற்குப் பெயர்தான் உலகப் பொதுமறையா?
ஒரு சமூகத்தில்
இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் சமமான உரிமையையும் சம அளவிலான வாழ்வாதாரத்தையும்
நிலை நிறுத்தச் செய்வது ஆட்சியாளரின் கடமையாகும். அந்தக் காலத்தில் மக்களின் பிரதிநிதியான
மன்னனது கடமையாகும். மக்கள் கல்வி அறிவு பெறச் செய்வதும் ஒரு மன்னனின் தலையாயக் கடமைகளில்
ஒன்றாகும். அந்த உரிமையை நிலைநிறுத்தாத மன்னன் இருந்தாலும் இறந்தாலும் ஒன்றுதான் என்று
கூற வேண்டிய வள்ளுவர் ஏன் தனி மனிதனை இப்படிச் சாடுகிறார்? அறிவு பெறும் உரிமை இல்லாத
மக்களை சாகச் சொல்வதில் இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவர் எந்த மனோபாவத்தில் செயல்பட்டார்?
எல்லா மக்களுக்கும் பொதுவான உரிமை இல்லாத அந்தச் சமூகத்தைச் சாட வேண்டிய பொறுப்புள்ள
மனிதர் தனி மனிதனை ஏன் சாகடிக்க வேண்டும்? திருவள்ளுவர் இந்த இடத்திலும் ஒருதலைச் சார்பாகவே
செயல்பட்டிருக்கிறார். அநீதிக்குத் துணைபோயிருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிறது.
நிற்கட்டும்.
அரசியல்
நாட்டார் வழக்காற்றில்
(Folklore) ‘ஆண்டிக்கு ஒரு
சட்டம் அம்பாரத்துக்கு ஒரு சட்டமா?’ என்று பேசுவதைக் கேட்டிருப்போம். ஆண்டி வேறு; அம்பாரம் வேறு அல்ல. இருவரும்
சமமாக மதிக்கத் தக்கவர்களே; இருவரும் மனிதர்களே. இப்படி இருக்கும்பொழுது திருவள்ளுவர்
பல இடங்களில் அரசனை இறைவன் என்றே குறிப்பிடுகிறார். அந்தக் காலத்தில் மக்களைக் காத்தவன்
அரசன்தான். அதனால்தான் அரசன் இறைவனுக்கு நிகராக வைத்து மதிக்கப்பட்டான் என்று நாம்
சமாதானம் செய்து கொள்ளலாம்.
ஈன்று புறந்தருதல் என்தலைக்
கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (புறம்.312)
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே. (புறம்.312)
இந்தப்
பாடலில் குலத்தொழில் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்பாடலின் ஆசிரியர் பொன்முடியாரின்
மூலமாக ஒரு பெண் குழந்தை பெறும் இயந்திரமாக மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறாள். மற்ற சமூகத்தினருக்கு
அவரவர் குலத்தொழிலே கடமை. ஆனால் வேந்தர்க்கோ ‘நன்னடை நல்கல்’ கடனாக வைக்கப்பட்டுள்ளது.
இதை இன்றைய கண்ணோட்டத்திலிருந்து நோக்கிப் பார்க்க வேண்டும். ஒரு பெண் நாடாளக் கூடாதா?
அல்லது கொல்லன்தான் நாடாளக் கூடாதா? இதிலும் சமாதானம் செய்து கொள்ளலாம். கொல்லன் நாடாளும்
பொழுது அவனும் அரசனாகிரானே… அப்பொழுது அவனுக்கும் நன்னடை நல்கல்தான் கடமையாக வைக்கப்பட்டிருக்கிறது.
அப்படி இருக்கும்பொழுது இதில் என்ன குற்றத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று கேட்கலாம்.
ஆனால், கொல்லன் அரசனாக ஏற்றுக்கொள்ளப்படுவானா? இல்லை அரசன் வேல் வடிக்கச் செல்வானா?
இந்த மனநிலைகளில்தான் திருவள்ளுவரும் அப்பட்டமாகச் செயல்பட்டிருக்கிறார். ஆண்டிக்கு
ஒரு சட்டம்; அம்பாரத்துக்கு ஒரு சட்டம்தான் இருக்க வேண்டும் என்கிறார். இனக்குழுச்
சமூகம் உருவான போது அரசன்/மன்னன் என்பவன் வானத்திலிருந்து புதிதாகக் குதித்தவன் அல்லன்.
மக்களோடு மக்களாக வேறுபாடு அற்று வாழ்ந்தவன்தான் இனக்குழுத் தலைவன். காலப்போக்கில்
அவனே தன்னைக் இறைவனாக்கிக் கொண்டான். மக்களுக்காகத்தான் மன்னன் என்னும் நிலை மாறி மக்கள்
மன்னனுக்காகவே என்று நடந்து கொண்டான். இல்லையெனில் மக்களோடு மக்களாக வாழ்ந்திருக்க
மாட்டானா? எதற்குத் தனக்கு மட்டும் சுகபோக வாழ்க்கை?
பெண்வழிச் சேறல்
இன்றைய
சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சரி நிகராக நோக்கப்பட வேண்டியவர்கள். ‘ஆணும் பெண்ணும்
நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.’ ‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை
காண் என்ற கும்மியடி’ என்று
பாரதியார் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நீங்கி வெளியுலகுக்கு அடியெடுத்து வைக்கும்படி
பெண்களை வரவேற்கிறார்.
ஆனால்,
திருவள்ளுவர் பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தில் இருக்கும் பத்து குறளிலும் ஒரு
ஆண் எந்தக் காரணம் கொண்டும் பெண்களின் பேச்சைக் கேட்டு நடக்கக்கூடாது என்று அறிவுரை
புகட்டுகிறார். அப்படிக் கேட்டு நடந்தால் என்னென்ன அசம்பாவிதங்கள் நேரும் என்றும் ஒன்றன்
பின் ஒன்றாகப் பட்டியலிடுகிறார். பெண்ணை இழிவுப் பொருளாகப் பார்க்கும் போகப் பொருளாகப்
பார்க்கும் மனோபாவம் திருவள்ளுவர் மனத்திலும் இழையோடியிருக்கிறது என்பது இந்த அதிகாரத்தின்
பத்து குறள்களும் அத்தாட்சியாக நிற்கின்றன.
உண்டிச்
சுருங்குதல் பெண்டிற்கழகு, தையல் சொல் கேளேல் என்று ஒரு தையலே கூறுகிறாள். அவள் பெயர்
அவ்வையார் என்று பிற்காலத்தில் அறியப்பட்டது. ஆனால், தையல் சொல் கேட்டு உருப்படி இல்லாமல்
போயிற்றா சங்க காலத்தில்? அதியமான் அவைக்களத்தில் அரசவைப் புலவராக அவ்வையார் அலங்கரிக்கவில்லையா?
அரசாட்சியைச் செம்மாந்து நடத்த அவ்வையார் உறுதுணை புரியவில்லையா? கல்வி கற்று ஒரு ஆணுக்கு
நிகராக அரசவையில் அமரவில்லையா? பெண் என்பவள் ஆணைவிடத் தாழ்ந்தவள் என்ற எண்ண ஓட்டம்
திருவள்ளுவர் மனத்தில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் குறள்களில் கொட்டிக் கிடக்கின்றன.
பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்கள் தங்கள் பெயரை அவ்வையார் என்று கூறிப் பெருமைப்பட்டுக்
கொண்டனர். சங்க காலத்தில் இருந்த அவ்வையார் வேறு. தையல் சொல் கேளேல், உண்டிச் சுருங்குதல்
பெண்டிற்கழகு என்று கூறும் அவ்வையார் வேறு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.
வரைவின் மகளிர்
எல்லாச்
சமூகத்திலும் விலை மகளிர் தாழ்மையான கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறார்கள். அதே கண்ணோட்டத்தில்தான்
திருக்குறளும் வரைவின் மகளிர் அதிகாரத்தில் வெளிப்பட்டிருக்கிறது கொஞ்சம் நாசூக்காக.
ஆனால், திருவள்ளுவர் அவர்கள் அந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணத்தையும் ஆராய்ந்து
அதற்கு விடிவும் சொல்லியிருக்கலாம்.
கால்பார் கோத்து ஞாலத்
தியக்கும்
காவற் சாகாடு உகைப்போன்
மாணின்
ஊறின் றாகி ஆறினிது
படுமே…… (புறம்.185, புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ்)
நாடா கொன்றோ, காடா
கொன்றோ
அவலா கொன்றோ, மிசையா
கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய
நிலனே. (மேற்படி, புறம் . 187)
என்ற
இரண்டு பாடல்களும் அரசனும் அவ்வந்நாட்டில் வாழும் ஆண்களும் தங்கள் ஒழுக்கத்தில் நேர்மையாகவமு
நல்லவராகவும் இருந்தால் பெண்களும் ஒழுக்கத்துடனேயே நடந்து கொள்வார்கள். அவர்கள் முறை
தவறி நடக்கும்பொழுது பெண்களும் தங்கள் ஒழுக்கம் கெட நேர்ந்து விடுகிறது எனப் பேசுகிறது.
ஒரே ஒரு குறளிலாவது திருவள்ளுவர் இப்படிப் பேசியிருக்கலாம். வரைவின் மகளிர்கள் இருப்பதற்கு
அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. அந்த நாட்டு அரசனும் அவ்வந்நாட்டு மக்களுமே காரணமாக இருக்கிறார்கள்.
ஆனால், கொஞ்சம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஏனெனில், எந்த அளவுக்குக் கேவலமாகப் பேச
முடியுமோ அந்த அளவுக்குப் பெண்களைச் சித்தர்கள் பேசி விட்டார்கள். சித்தர்களோடு ஒப்பிடும்பொழுது
திருவள்ளுவர் எவ்வளவோ மேம்பட்டவர்.
கொடிய
மாதர்கள் இடையுறும் நரகக்
குழியில் என்தனைக் கொண்டுசென் றழுத்திக்
கடிய
வஞ்சனை யால்…..
பேதை
மாதர்தம் மருங்கிடை ஆழ்ந்த
பிலத்தில் என்தனைப் பிடித்தழ வீழ்த்தி
வாதை
உற்றிட வைத்தனை ஐயோ….. ( திருவருட் பிரகாச வள்ளலார், பா. எண்:1008, 1009 இரண்டாம்
திருமுறை)
மலம்சொரிந்து
இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்
இத்தை
நீங்கள் இனிது என வேண்டா… (பட்டினத்தார், சித்தர் பாடல்கள், ப.205)
பெண்ணாகி
வந்ததொரு மாயப் பிசாசு (மேற்படி, ப.209)
இப்படியெல்லாம்
ஏசாமல் நாசூக்காக உணர்ச்சியற்ற பிணம் என்பதோடு நிறுத்திக் கொண்டார் என்ற அளவில் கொஞ்சம்
மகிழ்ச்சி அடையலாம்.
அவையஞ்சாமை
தற்காலத்தில்
அரவாணி, திருநங்கை என்ற சொற்களால் குறிப்படப்படும் ஆணியல்பும் பெண்ணியல்பும் கலந்த
நம்மிடையே வாழும் ஒரு இனத்தவரை இழிவு படுத்தும் நோக்கில் திருவள்ளுவர் அவையஞ்சாமை அதிகாரத்தில்
எழுதியுள்ளார். சமீப காலங்களில் இவர்களும் சம மதிப்புடைய மூன்றாவது பாலினமாக நோக்குவது
இங்குக் குறிப்பிடத்தக்கது.
பகையகத்துப்
பேடிகை ஒள்வாள்; அவையகத்து
அஞ்சும்
அவன்கற்ற நூல்.(727)
மேற்படி கட்டுரையில்
நாம் கண்ட அனைத்தும் ஒரு அறிமுக நிலையிலேயே அமைகிறது. இக்கருத்துக்களில் குறைபாடுகள்
காண்பவர்கள் உணர்த்தினால் நல்லது. இறுதியாக, சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. (118) என்று கூறிய திருவள்ளுவர் தன் மனதறிந்து
இது வரை நாம் மேற்கண்ட அநீதிகளை எழுதியிருக்க மாட்டார் என்று நம்பலாம். காலத்திற்கு
ஏற்றாற் போன்று சில கருத்துக்களில் மாற்றங்கள் எல்லாவற்றிலும் ஏற்படக்கூடும். அதில்
தமிழின் மிக முக்கிய இலக்கியமான தமிழனைச் தலைநிமிரச் செய்த அற்பதப் படைப்பான திருக்குறளும்
விதிவிலக்கல்ல.
‘தமிழ்
நூல்கள் எதற்கும் கிடைக்காத அங்கீகாரம் திருக்குறளுக்குக் கிடைத்தது. தமிழ்ச் சமூக
வரலாற்றில் ஏற்பட்ட ஒவ்வொரு கட்ட மாற்றத்திலும் திருக்குறள் வேறு வேறு கண்ணோட்டத்தில்
உள்வாங்கப்பட்டதை அறிகிறோம். இத்தன்மை இப்பனுவலுக்கு உருவான பின்புலம் குறித்துப் பல
கோணங்களிலும் உரையாடுவதற்கு வாய்ப்பு உண்டு.’ (ப.148, திருக்குறள்: பன்முக வாசிப்பு)
என்று கூறும் டாக்டர் வீ. அரசுவின் கருத்து இங்கே நினைவு கூறத்தக்கது. திருக்குறள்
எந்தக் கண்ணோட்டத்தில் நோக்கினாலும் அந்தக் கண்ணோட்டத்திற்குத் தகுந்தபடி நெகிழ்ந்து
கொடுக்கும் தன்மை கொண்டது. அந்த அளவுக்கு மிகச் சிறந்த இலக்கிம் திருக்குறள். இதை நினைத்து
நாம் திருக்குறளை மேலும் சிறப்புறச் செய்வோமாக. அதே சமயம் மேற்படியான சில கருத்துக்களை
வாழ்க்கையில் (திருக்குறளில் திருத்த முடியாது. அதற்கு உரிமையும் கிடையாது.) திருத்திக்
கொள்வோமாக. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இம்மியளவு கூடப் பாகுபாடு இல்லாது வாழும்
ஒரு சமூகத்தைப் படைப்போமாக.
உசாத்துணை
நூல்கள்:
திருக்குறள்:
பன்முக வாசிப்பு
பதிப்பாசிரியர்:
வெ. பிரகாஷ்
வெளியீடு:
மாற்று, 176, Q பிளாக்,
தொல்காப்பியர் தெரு,
எம்.எம்.டி.ஏ. காலனி,
சென்னை-106.
சித்தர்
பாடல்கள்
ஆசிரியர்:
மானோஸ்
வெளியீடு:
பூங்கொடி பதிப்பகம்,
14, சித்திரைக்குளம் மேற்கு வீதி,
மயிலாப்பூர், சென்னை-4.
திருக்குறள்-ஆராய்ச்சிப்
பதிப்பு
பதிப்பாசிரியர்:
கி.வா.ஜகந்நாதன்
வெளியீடு:
இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம்,
பெரியநாயக்கன் பாளையம்,
கோயம்புத்தூர்-641020.
1 கருத்து:
nallaruku shakthi
கருத்துரையிடுக