வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை யிலாத சொலல்.... Welcome to One and All! நீங்கள் வருகை தந்தமைக்கு அடையாளமாய் உங்கள் கால்தடத்தை விட்டுவிட்டுச் செல்லலாமே பின்னூட்டம் இடுவதின் மூலமாக..!

16 மார்ச், 2011

ஐகாரக் குறுக்கம்



யாப்பிலக்கணத்தில் எழுத்து வெறும் மூன்று வகை மட்டுமே என்பது இலக்கண வல்லுநர்களான உங்களில் பெரும்பாலானவருக்குத் தெரிந்திருக்கும். அடியேனுக்கு ஒரு சிறிய ஐயம் உண்டு. அதைப்பற்றித்தான் இந்த இடத்தில் தெரிந்துகொள்ள முடியுமா என்று முயற்சி செய்கிறேன்.

யாப்பு இலக்கணத்தில் மூன்றே எழுத்துக்கள் என்பது குறில், நெடில், ஒற்று என்பது மட்டுமே. அப்படியானால் குறுக்கங்கள் என்று நாம் படிக்கும் இலக்கணம் யாப்பு இலக்கணத்தில் பயன்படுத்த முடியாதா? இந்த விடயத்தில் திருவள்ளுவரும் தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். நான் பார்த்த அளவுக்கு இந்தப் பிரச்சனைக்கு அவர் இடமே தரவில்லை. குறிலாக எடுத்துக்கொண்டாலும் சரி.... நெடிலாக எடுத்துக் கொண்டாலும் சரி.... தளை தட்டுவதே இல்லை அவரது குறளில்.

ஆனால் நந்திக் கலம்பகத்தில் ஒரு வெண்பாவில்,

ஈட்டுபுகழ் நந்தி பாணநீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடியளவும் காட்டிலழும்
பெயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீயென்றேன் நான்.

என்னும் வெண்பாவில் எங்கையர்தம் என்னும் சீரைக் கவனித்தால் அதில் வரும் ஐகாரமானது ஐகாரக் குறுக்கமாகத்தான் இருக்கிறது. நந்திக் கலம்பக ஆசிரியரும் குறுக்கம் (வெண்பாவிலும் வரலாம்; அது நெடில் அல்ல. மாறாக, அது யாப்பில் குறிலாகவே கொள்ளப்படும்.) என்பதை மனதில் கொண்டுதான் அந்த வெண்பாவை இயற்றியிருக்கிறார். நெடிலாகக் கொண்டால் தளை தட்டும்; இலக்கணப் பிழை ஏற்படும்.

எனவே, வல்லுநர்களாகிய நீங்கள் ஐகாரக் குறுக்கம் நெடிலல்ல; அது குறில்தான்; வெண்பாவில் ஐகாரக் குறுக்கத்தைக் குறிலாகவே வெண்பாவில் பயன்படுத்தலாமா என்பதை எனக்கு விளக்குங்கள்.

2 கருத்துகள்:

முனைவர் பா.குப்புசாமி சொன்னது…

நன்பருக்கு வணக்கம். முதலில் உங்கள் இந்த முயற்ச்சிக்குப் பாராட்டுக்கள். உங்கள் இந்த கேல்விக்கு பதில் யாப்பருங்கலக்காரிகை ஒழிபியலில் இருக்கிறது. அதாவது இது போன்ற சூழலில் நீங்கள் உங்கள் விருப்பத்திற்க்கேற்ப்ப ஐ -யை குறிலாகவோ நெடிலாகவோ பயன் படுத்திக்கொள்ளலாம் என்கிறது யாப்பு ஒழிபியல். இந்த இடத்தில் ஐ -யானது ஜோக்கர் போல நமக்கு யாப்பில் பயன் படுகிறது.

உஙள் அய்யம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.

இதுபோல அறிவார்ந்த தகவல்களை மேலும் எதிர்பார்க்கிறேன். முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

Sakthivel சொன்னது…

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! நமது விருப்பத்திற்கேற்ப இலக்கணத்தில் வரும் குறுக்கத்தை நெடிலாகவோ குறிலாகவோ எடுத்துக்கொள்ளலாம் என்று இலக்கணத்தில் கூறியிருப்பதாகத் தாங்கள் கூறுகிறீர்கள். நன்று. ஆனால், நான் மேலே குறித்த பாடலில் குறிலாக மட்டுமே எடுக்க முடியும். உங்கள் மன விருப்பப்படி அதில் வரும் ஐகாரக் குறுக்கத்தை நெடிலாகக் கட்டாயம் எடுக்க முடியாது. அப்படி மீறி எடுத்தால் இலக்கணப் பிழை ஏற்படும். வெண்பா ஒன்றில் நாலசைச் சீராக வந்துவிடும். தளை தட்டும். வெண்பாவின் இலக்கணம் பிறழும்.... இல்லையா?

கருத்துரையிடுக